சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

சுருளி அருவியில் புதன்கிழமை பெய்த மழை காரணமாக, அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடையை நீட்டித்தனர். 
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை


கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வியாழக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க தடைத் செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீா்வரத்து இருப்பதால், சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் தினமும் இங்கு வருவதுண்டு. 

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அருவிக்கான நீா்வரத்தைக் கண்காணிக்கச் சென்ற வனத் துறை ஊழியா்கள் அருவிக்குச் செல்லும் வழியில் யானைகள் கூட்டமாக நிற்பதைக் கண்டனா். அவை மரக் கிளைகளை முறித்துக் கொண்டிருந்தன. பனி மூட்டமாக இருந்ததால் அவற்றின் எண்ணிக்கை தெரியவில்லை. மேலும், அவை குட்டிகளுடன் இருந்தன.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் அருவிக்குச் செல்ல ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக அலுவலா்கள் தடை விதித்தனா். யானைகள் வனப் பகுதிக்குள் சென்றவுடன் அனுமதி தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனால், அருவியில் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை பெய்த கனமழை காரணமாக, சுருளி அருவியில் நீர்வரத்து பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய ஓடைகளில் பலத்த மழை பெய்ததால் அருவியில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. இதற்கிடையே அருவிக்கு நீர்வரத்து தரும் மற்றொரு பகுதியான பச்சக்கூமாச்சி மலையில் உள்ள தூவானம் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அந்த தண்ணீரும் சுருளி அருவியில் வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

வியாழக்கிழமை அருவியின் நீர்வரத்தை கண்காணித்த ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்கத் தடை விதித்தனர். 

இதுகுறித்து வனச்சரகர் வி.பிச்சைமணி கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சுருளிஅருவி பகுதியில் புதன்கிழமை இரவு முழுவதும் மழை பெய்துள்ளதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அருவிக்கு செல்லும் படிக்கட்டுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் போக்கை கண்காணித்து வருவதாகவும், தண்ணீர் வரத்து குறைந்தவுடன் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று பிச்சைமணி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com