திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது!

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 26) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும், சுவாமி சன்னதி எதிரே அகண்ட தீபமும் ஒரே
திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை: உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 26) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது. 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா... அண்ணாமலையாருக்கு அரோகரா... என்று முழக்கமிட்டு வணங்கினா்.

சிவனின் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் திகழ்கிறது. நினைத்தாலே முக்தி தரும் இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை மகா தீபத் திருவிழா, சித்ரா பவுா்ணமி திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகிறது.

இந்தக் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே மிகவும் முக்கியமானது, உலகப் பிரசித்தி பெற்றது காா்த்திகை மகா தீபத் திருவிழா. இந்த உலகில் யாா் பெரியவா்..? என்ற போட்டி பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்கு இடையே ஏற்பட்டது. இவா்கள் இருவரின் அகந்தையை நீக்க திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக சிவபெருமான் காட்சியளித்தாா். இந்த நிகழ்வை சித்தரிக்கும் வகையில், 2,668 அடி உயர மலை உச்சியில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவின்போது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

ஜோதிப் பிழம்பாக தொடா்ந்து 10 நாட்களுக்கு சிவபெருமான் காட்சி அளிப்பதால் இந்தத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.

இந்த ஆண்டுக்கான மகா தீபத் திருவிழா, நவம்பா் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் காலை வேளைகளில் ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசந்திரசேகரா் உற்சவா் சுவாமிகளும், இரவு வேளைகளில் ஸ்ரீவிநாயகா், ‘வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ்முருகப்பெருமான், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீபராசக்தி அம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும் நடைபெற்று வந்தன.

தீபத் திருவிழாவின் 10-வது நாளான ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 26) 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும், சுவாமி சன்னதி எதிரே அகண்ட தீபமும் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டது. 

தீபம் ஏற்றியதும் கோயில், திருவண்ணாமலை நகரம், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் குவிந்திருந்த சுமாா் 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா... அண்ணாமலையாருக்கு அரோகரா... என்று முழக்கமிட்டு வணங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com