150 பெண்கள், திருநங்கைகளுக்கு மானிய ஆட்டோக்கள்: முதல்வர் வழங்கினார்

தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 148 பெண் ஓட்டுநர்கள் மற்றும் 2 திருநங்கை ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய ஆட்டோ ரிக்சாக்களை  முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழ
பெண்கள், திருநங்கைகளுக்கு மானிய விலையில் புதிய ஆட்டோ ரிக்சா வாகனங்களை வழங்குவதை கொடியசைத்து தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
பெண்கள், திருநங்கைகளுக்கு மானிய விலையில் புதிய ஆட்டோ ரிக்சா வாகனங்களை வழங்குவதை கொடியசைத்து தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 148 பெண் ஓட்டுநர்கள் மற்றும் 2 திருநங்கை ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய ஆட்டோ ரிக்சாக்களை  முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார். 

சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற விழாவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்கள் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு  புதிய ஆட்டோ ரிக்சா/  தொழில்முறை டாக்சி வாகனம் வாங்குவதற்கு 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

2022-2023 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில் “தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்கள், சொந்தமாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்குவதை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்பினை உருவாக்கவும், அவர்களின் வருமானம் ஈட்டும் திறன் மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பொருட்டும், 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா 1 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. 

அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு முதல்வரால் 10.07.2023 அன்று தலைமைச் செயலகத்தில், பத்து பெண் பயனாளிகளுக்கு புதிய ஆட்டோ ரிக்சாக்களுக்கான பதிவு ஆவணங்கள் மற்றும் அனுமதி ஆவணங்கள் வழங்கப்பட்டு இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும், 15.08.2023 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், திருநங்கை ஓட்டுநர்களுக்கும் இம்மானியத் திட்டத்தினை நீட்டித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு மின்சாரம் / சி.என்.ஜி. / எல்.பி.ஜி. மூலம் இயங்கக் கூடிய ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்க தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தினை தொழில்முறை டாக்சி வாகனம் வாங்குவதற்கும், திருநங்கை ஓட்டுநர்களுக்கும் நீட்டித்து 16.08.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. 

அதன்படி, சென்னை, தீவுத்திடலில் இன்று நடைபெற்ற விழாவில் 148 பெண் ஓட்டுநர்கள் மற்றும் 2 திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா / தொழில்முறை டாக்சி வாகனம் வாங்குவதற்கு 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட புதிய ஆட்டோ ரிக்சா வாகனங்களை வழங்கும் விதமாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், பெண் ஓட்டுநர்கள் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

இவ்விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்  துறை அமைச்சர்  பி.கே. சேகர்பாபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
சி.வெ. கணேசன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி. பிரபாகரராஜா, துணை மேயர் மு. மகேஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com