காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!

'கள ஆய்வில் முதல்வர்' திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
Published on
Updated on
2 min read

'கள ஆய்வில் முதல்வர்' திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

கள ஆய்வில் முதல்வர்' திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கு செல்லும் வழியில்
காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முதல்வர் சென்றுள்ளார். 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்யும் 'கள ஆய்வில் முதல்வர்' திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், முதன்முறையாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து 1.2.2023 மற்றும் 2.2.2023 ஆகிய தேதிகளில் வேலூர் மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 15.2.2023 மற்றும் 16.2.2023 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்திலும், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக 5.3.2023 மற்றும் 6.3.2023 ஆகிய தேதிகளில் மதுரை மாவட்டத்திலும்,

விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 26.4.2023 மற்றும் 27.4.2023 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 25.8.2023 மற்றும் 26.8.2023 ஆகிய தேதிகளில் நாகப்பட்டினத்திலும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். 

அதன் தொடர்ச்சியாக இன்று (17.10.2023) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக செங்கல்பட்டு மாவட்டத்திற்குச் செல்லும் வழியில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தந்துள்ள பொதுமக்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அலுவலகத்தின் வருகைப் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை ஆய்வு செய்த முதல்வர், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 66 மையங்களில் சுமார் 5,000 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தரமான உணவினை உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்று அலுவலர்களிடம் முதல்வர் அறிவுறுத்தினார். மேலும், இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட வேண்டும் என்றும், குடிநீர் விநியோகப் பணிகள், பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டடங்களை சீரமைத்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

தொடர்ந்து, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்த மாணவியிடம், 'புதுமைப் பெண்' திட்டத்தின் கீழும் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் உதயா கருணாகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com