திமுகவின் கையெழுத்தால் இயக்கத்தால்  நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? - இபிஎஸ் கேள்வி

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கையெழுத்து இயக்கத்தால் நீர் தேர்வு ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுப்பியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கையெழுத்து இயக்கம் திமுகவின் புதிய நாடகம்.
திமுகவின் கையெழுத்தால் இயக்கத்தால்  நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? - இபிஎஸ் கேள்வி


சேலம்: நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கையெழுத்து இயக்கத்தால் நீர் தேர்வு ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுப்பியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கையெழுத்து இயக்கம் திமுகவின் புதிய நாடகம் என விமர்சனம் செய்துள்ளார். 

நீட் விலக்கை வலியுறுத்தி திமுக இளைஞா் அணி, மாணவரணி மற்றும் மருத்துவா் அணி சாா்பில் ‘நீட் விலக்கு நம் இலக்கு’ என்ற மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், சேலத்தில் இஸ்லாமியர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். நீட்டை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்றெல்லாம்  பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இன்று நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம் என மக்களை திசைதிருப்ப வருகின்றனர். இவர்களது கையெழுத்து இயக்கத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம், திமுகவின் புதிய நாடகம். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 50 லட்சம் பேரிடம் பெறும் கையெழுத்தை வாங்கி என்ன செய்யப் போகிறாா்கள்?, அதை யாரிடம் கொடுப்பார்கள்? இதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? திமுகவின் போலி நாடகத்தை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். மத்திய அரசை எதிர்க்க முடியாத அரசாக திமுக உள்ளது. 

மக்களவைத் தேர்தல் வந்துவிட்டதால் நீட்டை ஒழிக்க முயற்சிப்பது போன்று பாசாங்கு செய்து மக்களை ஏமாற்றுவதற்கு நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர். 

ஜல்லிக்கட்டு என்பது மாநில பிரச்னை, நீட் என்பது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இரண்டும் வேறு.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்ததும், திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. இஸ்லாமியர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்தது முந்தைய அதிமுக அரசு. 

கூட்டணி என்பது தேர்தலின்போது வைப்பது. ஆனால் கட்சியின் கொள்கை நிலையானது. அதிமுக பாஜகவின் பி டீம் கிடையாது. நாங்கள்தான் உண்மையான ஏ டீம். பாஜக அமைச்சரவையில் இருந்தபோதே கருத்து வேறுபாடு ஏற்பட அதை தூக்கி ஏறிந்த கட்சி அதிமுக. அதிமுகவை பொருத்தவரையில் பாஜக ஒரு பொருட்டே அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com