சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

தஞ்சாவூர் பெரியகோயிலில் புதன்கிழமை நடைபெற்ற 1038 - ஆம் ஆண்டு சதய விழாவில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தஞ்சாவூர் பெரியகோயிலில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற சதய விழாவில் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்த மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்.
தஞ்சாவூர் பெரியகோயிலில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற சதய விழாவில் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்த மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்.
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலில் புதன்கிழமை நடைபெற்ற 1038 - ஆம் ஆண்டு சதய விழாவில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூட்டிய நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடர்ந்து கருத்தரங்கம், கவியரங்கம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஐப்பசி மாத சதய நாளாகிய புதன்கிழமை காலை மங்கள இசையுடன் தொடங்கிய இந்த விழாவில், கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்தார். இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுர ஆதீனத்தின் 27 -ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம், துணைத் தலைவர் எஸ்.சி. மேத்தா, மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் ஆர். மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, ராஜராஜசோழன் சிலைக்கு 70-க்கும் அதிகமான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும், யானை மீது திருமுறைகளை வைத்து மங்கல இசைக் கருவிகள், சிவகணங்கள் முழங்க திருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் கோயில் வளாகத்தை அடைந்தது. இதில், 48 ஓதுவார்கள் கலந்து கொண்டு திருமுறைப்பண்களைப் பாடி வந்தனர்.

இதனிடையே, பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பால், தயிர், வெண்ணெய், நெய், சந்தனம், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, வில்வம், தைலக்காப்பு, சாம்பிராணி தைலம், நவகவ்யம், திரவியப் பொடி, வாசனைப் பொடி, பஞ்சாமிர்தம், இளநீர் உள்பட 48 வகையான பொருள்களால் பேரபிஷேகம், பிற்பகல் 1.40 மணிக்கு பெருந்தீப வழிபாடு, மங்கள இசை, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, மாலை 4 மணிக்கு நாட்டியாஞ்சலி, நாத சங்கமம், இரவு 8 மணிக்கு சுகிசிவத்தின் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com