சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சேலம், கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்


சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் சேலம் மாநகரப் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. இந்த கோயில் கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர சிற்றரசர்களால் கட்டப்பட்டு காவல் தெய்வமாக திருமணிமுத்தாற்று கரையோரத்தில் வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது சேலம் மாவட்ட மக்களால் காவல் தெய்வமாக வழிபட்டு வரும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் கருவறை சிறியதாகவும், சேதமடைந்தும் காணப்பட்டதால் இந்த கோயிலை புனரமைத்து தரவேண்டும் என சேலம் மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் தமிழ்நாடு அரசு கோவில் திருப்பணிகளுக்கு ரூ.4.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து கோயில் திருப்பணிகள் கடந்த 2016 -ஆம் ஆண்டு தொடங்கியது. கோயில் வளாகத்தில் ஆகம விதிகளின்படி பழமை மாறாமல் புதிதாக பல்வேறு அழகிய சிற்பங்களுடன் கூடிய கருவறை கட்டப்பட்டுள்ளது. இந்த கருவறை மேற்கு கூறையை 16 தூண்கள் தாங்கி நிற்கின்றனர். அனைத்து தூண்களிலும் விநாயகர்,முருகன், பல்வேறு அம்மன்களின் உருவ சிலைகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குடமுழுக்கு விழா நடைபெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் கோபுரம்

மேலும் மூலஸ்தான கோபுரத்திலும் பல்வேறு அம்மன் உருவசிலைகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேற்கு வாசல் அருகே 21 அடி உயர அம்மன் சிலை பக்தர்களை மெய்சிலிர்க்கும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து குடமுழுக்கு விழா, கடந்த அக். 18-ஆம் தேதி கணபதி ஹோமம், முளைப்பாலிகை இடுதலுடன் தொடங்கியது. புதன்கிழமை கணபதி வழிபாடு, சங்கல்பம், புண்யாகவஜனம், அக்னி சங்கரணம், சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட யாக சாலைகளில் 23 யாக குண்டம் மற்றும் 16 கலசங்கள் வைக்கப்பட்டுஅா்ச்சகா்கள் வேத, மந்திரங்களை முழங்க முதற்கால வேள்வி வழிபாடு தொடங்கியது.

இதனிடையே வியாழக்கிழமை காலை இரண்டாம் கால வேள்வி வழிபாடு மற்றும் ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசங்கள் பொருத்துதல், மூலவா் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மூன்றாம் கால வேள்வி வழிபாடு நடைபெற்றது.

கோபுரத்தின் மீது ஊற்றப்பட்ட புனிததீர்த்தம் மலர்கள் ட்ரோன் மூலம் பக்தர் மீது தெளிக்கப்பட்டது.

மேலும், கோட்டை மாரியம்மனுக்கு, அண்ணனாக விளங்கக்கூடிய அழகிரிநாதா் கோயிலில் இருந்து மாரியம்மன் கோயிலுக்கு 108 வகையான சீா் வரிசை பொருள்கள் கொண்டு வரப்பட்டன.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை (அக். 27) அதிகாலை 4.30 மணிமுதல் காலை 7.30 மணி வரை நான்காம் கால வேள்வி வழிபாடு, காலை 7.40 மணி முதல் காலை 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னிதி விமானம் மற்றும் கொடிமரத்துக்கு சமகாலத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. 

தொடா்ந்து காலை 8.30 மணி முதல் மகா கணபதி, பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சுவாமிகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து குடமுழுக்கு விழா நடைபெறும்போது கோபுரத்தின் மீது ஊற்றப்பட்ட புனிததீர்த்தம் மோட்டார் மூலம் பக்தர் மீது தெளிக்கப்பட்டது.

குடமுழுக்கு விழாவுக்கு மக்கள் வெள்ளத்தில் அணிவகுத்து வரும் அமைச்சர் கே.என். நேரு கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள்.

அதைத் தொடா்ந்து காலை 10 மணிக்கு மூலவா் சுவாமிக்கு மகா அபிஷேகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம் போன்ற பல்வேறு வைபங்களும் நடைபெற்றது.

விழாவில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, ஆட்சியா் செ.காா்மேகம், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், துறையூா் ஆதீனம் வேலாயுத சிவப்பிரகாச பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடமுழக்கு விழா நடைபெற்றதால் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு கோபுர தரிசனம் பெற்றனர்.

விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனா்.

கோட்டை மாரியம்மன் குடமுழுக்கு விழாவை காண வந்திருந்த  மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர். 

பின்னா் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் தங்கரதம் புறப்பாடு நடைபெறுகிறது. இதில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்க உள்ளார்.

இதனிடையே பக்தர்களின் வசதிக்காக சேலம் மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவித்து பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தா்கள் வருவாா்கள் என்பதால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் தரிசனம் செய்ய தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குடமுழுக்கு விழாவை காண வந்திருந்த மக்கள் கூட்டம்

குடமுழுக்கு விழாவையொட்டி, சுமாா் 1200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்; வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

திருக்கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  குடமுழுக்கின் போது கூட்டநெரிசலை தவிப்பதற்காக திருக்கோவில் சுற்றி நான்கு இடங்களில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com