திருச்சி, நெல்லை, சேலத்தில் மெட்ரோ ரயில் வருமா? - சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல்!

திருச்சி, நெல்லை, சேலம் நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய அரசிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. 
திருச்சி, நெல்லை, சேலத்தில் மெட்ரோ ரயில் வருமா? - சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல்!

திருச்சி, நெல்லை, சேலம் நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. 

சென்னையில் கடந்த 2015ல் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. கோவை, மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதையடுத்து திருச்சி, நெல்லை, சேலம் நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகளை தமிழ்நாடு அரசின் சிறப்பு முன்னெடுப்புகளின் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக் சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி, திருச்சியில் மொத்தம் 45 கி.மீ. தூரத்திற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. சமயபுரத்தில் இருந்து வயலூர் வரை 19 கி.மீ. தூரத்திற்கு 19 நிறுத்தங்களும், இரண்டாவது வழித்தடமாக துவாக்குடியில் இருந்து பஞ்சப்பூர் வரை 26 கி.மீ. தூரத்தில் 26 நிறுத்தங்கள் என இரு வழித்தடங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. 

திருநெல்வேலியில் மொத்தம் 39.07 கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் அமைக்கலாம் என்று தெரிவித்துள்ளது. 13 நிறுத்தங்களுடன் 12.39 கி.மீ. தூரத்திற்கு பேட்டையில் இருந்து சங்கனாபுரம் வரை, 12 நிறுத்தங்களுடன் 12.03 கி.மீ. தூரத்திற்கு பாளையங்கோட்டை முதல் பொன்னாக்குடி வரை, 15 நிறுத்தங்களுடன் 14.65 கி.மீ. தூரத்திற்கு சங்கர் நகரில் இருந்து வசந்த நகர் வரை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல சேலத்தில் 35.19 கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்கள் அமைய வாய்ப்புள்ளதாக அறிக்கை கூறுகிறது. அதன்படி, கரபுரநாதர் கோயிலில் இருந்து அம்மாபேட்டை வழியாக அயோத்தியாபட்டினம் ரயில் நிலையம் வரை 17.16 கி.மீ. தூரத்திற்கு 19 நிறுத்தங்களுடன் முதல் வழித்தடமும், கருப்பூரில் இருந்து சேலம் ரயில் நிலையம் வழியாக நல்லிகாலப்பட்டி வரை 18.03 கி.மீ. தூரத்திற்கு 19 நிறுத்தங்களுடன் இரண்டாவது வழித்தடமும் அமைக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com