அம்பத்தூர் தவிர.. சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

தென்மேற்குப் பருவமழை பெரிய அளவில் களைகட்டாவிட்டாலும் கூட, சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது.
அம்பத்தூர் தவிர.. சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

சென்னை: சென்னையில் தென்மேற்குப் பருவமழை பெரிய அளவில் களைகட்டாவிட்டாலும் கூட, அவ்வப்போது பொத்துக்கொண்டு பெய்ததன் காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது.

ஜூன் மாதம் முதலே, அவ்வப்போது திடீரென பலத்த மழை பெய்துவிட்டு சென்றுவிடும். இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்காமல் போய்விட்டாலும், நிலத்துக்கு நீர்மட்டம் கூடிவிட்டது.

சென்னையில், ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஆகஸ்ட் மாதம், அம்பத்தூரைத் தவிர்த்து பிற இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டிருக்கும் நிலத்தடி நீர்மட்ட நிலவரம் குறித்த பட்டியலில், ஒட்டுமொத்தமாக 0.62 மீட்டருக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், சென்னை மாநகரத்துக்கு ஜூன் முதல் 544.7 மி.மீ. மழை கிடைத்திருக்கிறது. இது 66 சதவீதம் கூடுதலாகும்.

சென்னையிலேயே நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்த பகுதிகளில் திருவிக நகர் 1.74 மீட்டருடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 1.41 மீட்டருடன் கோடம்பாக்கம் உள்ளது. ஆனால், அம்பத்தூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 0.70 மீட்டர் சரிந்துள்ளது. ஜூலையில் 6.31 மீட்டரில் கிடைத்ததண்ணீர், ஆகஸ்ட் மாதத்தில் 7.01 மீட்டரில் கிடைக்கிறது. 

இதுவரை வெறும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருந்த பல பகுதிகளுக்கும் தற்போது சென்னை குடிநீர் வாரியம் குழாய்கள் மூலம் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து போர்கள் போடும் பணி மந்தமாகவே இருப்பதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் நல்ல முறையில் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் குடிநீர் வாரிய அதிகாரிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com