தேர்தலில் கொடுத்த முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம்: காஞ்சிபுரத்தில் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

தேர்தலில் கொடுத்த முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம் என்று காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். 
தேர்தலில் கொடுத்த முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம்: காஞ்சிபுரத்தில் மு.க. ஸ்டாலின் பெருமிதம்


தமிழக அரசின் திட்டங்களிலேயே அதிக நிதி கொண்ட மிகப்பெரிய திட்டமாகக் கருதப்படும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். இதன் மூலம் தேர்தலில் கொடுத்த முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம் என்று காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். 

மகளிருக்கு மாதம் தோறும் ரூ. ஆயிரம் வழங்கும் திட்டத்தை கொண்டு வருவோம் என தேர்தலின் போதுவாக்குறுதி அளித்து இருந்தோம். இந்த வாக்குறுதியை போதுமான நிதி இல்லாத காரணத்தால் உடனடியாக நிறைவேற்ற முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் பொய்யான வாக்குறுதியை தந்து விட்டோம் என்று சொல்லி வந்தார்கள். பொய் பிரசாரம் செய்தார்கள். இப்போது நிதி நிலைமை சரியான பிறகு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறோம். 
திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகள் எண்ணற்ற பல மக்கள் நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன. 

இந்த நிலையில் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்தத் திட்டத்தை எப்படியாவது முடக்க வேண்டும் என்று பார்த்தார்கள். ஆனால் முடியவில்லை. சொன்னதைச் செய்வான் கலைஞர் மகன் என்பதற்கு இத்திட்டம் ஒரு சாட்சி. 

காஞ்சிபுரத்தில் என்னால் தொடங்கி வைக்கப்படுவதைப் போல தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். தமிழக முதல்வர் பொறுப்பில் உட்கார்ந்து உங்களுக்கு தேவையானதை செய்து கொண்டிருக்கிறேன். இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன அதில் ஒன்று பலனை எதிர்பாராமல் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம். இரண்டாவது இத்திட்டமானது பெண்களின் வாழ்வை உயர்த்த உறுதுணையாக இருக்கும். இந்த இரண்டு நோக்கங்களுமே இத்திட்டத்தை கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். 

மதத்தின் பெயராலும், ஆதிக்க வர்க்கங்களாலும் பெண்கள் முடக்கப்பட்டார்கள். பெண்களை அடிமையாக நினைக்கும் காலமும் இருந்தது. ஆனால் இன்று பெண்கள் அவ்வாறு முடக்கப்படவில்லை. இதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சியில் ஆண்களை விட பெண்களே உயர்ந்து நிற்கிறார்கள். பெண்ணும் ஆணும் சரி நிகர் சமானம் என்று உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி. அது இன்று நடந்து கொண்டிருக்கிறது.  

தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின் மூலம் 1,06,50000 பேர் பயனடைய உள்ளதாகவும் பேசினார் முதல்வர் மு க ஸ்டாலின். 
இந்த விழாவிற்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார்.  க.செல்வம் எம்.பி.,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் க. சுந்தர், எழிலரசன், செல்வப் பெருந்தகை, காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்று பேசினார். நிறைவாக ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com