

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து, உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு தமிழக அரசு சார்பில், குறுஞ்செய்தி மூலம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான தகவல் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைத்திருக்கிறது. ஆனால், விண்ணப்பித்து, தகுதி இருந்தும் எங்களுக்குக் கிடைக்கவில்லை என்ற மனக்குமுறல் ஆங்காங்கே எழுந்துகொண்டுதான் இருக்கிறது.
திட்டம் தொடங்கப்படுவதற்க முன்பே, பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கும் பணி தொடங்கி, கிட்டத்தட்ட ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. பெரிய தொகை, அதுவும் ஒரே நாளில், எந்த நெரிசலும், அலைச்சலும் இன்றி மகளிரின் கைகளில் சென்றடைந்திருக்கிறது என்றால் அதன்பின்னால் எத்தனையோ அரசு மற்றும் வங்கி அதிகாரிகளின் கடின உழைப்பு மறைந்திருக்கிறது.
இந்த நிலையில், கிட்டத்தட்ட 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பயனடைந்தவர்கள் எண்ணிக்கையில் இது சரிபாதியாக உள்ளது. நிராகரிக்கப்பட்டவர்கள், தங்களது விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற ஆயிரம் கேள்விகளுடன் காத்திருக்கிறார்கள்.
அதற்கான பதில் அவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவேக் கிடைத்துவிடும். ஆனால், குறுஞ்செய்தி கிடைக்கப்பெறாதவர்கள், என்ன செய்யலாம்?
இதற்காக உருவாக்கப்பட்ட 9952951131 என்ற எண்ணை தங்களின்குடும்ப அட்டைக்கு அளித்துள்ள கைப்பேசி எண்ணில் பதிவு செய்துகொள்ளுங்கள்.
பிறகு வாட்ஸ்ஆப்பிலிருந்து Hi என டைப் செய்து அனுப்புங்கள்.
வணக்கம்,
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தாங்கள் அளித்த விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை, தங்களின் குடும்ப அட்டையின் எண் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். தங்களது பன்னிரண்டு எண் கொண்ட குடும்ப அட்டை எண்ணை கீழே தட்டச்சு செய்யவும் என்று உங்களுக்கு ஒரு பதில் வரும்.
உடனடியாக உங்களது குடும்ப அட்டையின் 12 இலக்க எண்களை உள்ளிடவும்.
உங்கள் விண்ணப்பம் தகுதியற்றது என கண்டறியப்பட்டுள்ளது என்றால், அதற்கான காரணம் குறித்த விளக்கம் வாட்ஸ்ஆப்பிலேயே தெரிய வரும்.
ஒருவேளை, அந்த காரணம் சரியானது அல்ல என்றால், அது குறித்து அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
அல்லது, மகளிர் உரிமைத் தொகை பெற தகுதிபெற்றிருந்தால், வாழ்த்துக்கள். உங்கள் விண்ணப்பம் தகுதியானது என கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படும். உடனடியாக உங்கள் வங்கி அல்லது இ-சேவை மையத்தை அணுகவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.