வாச்சாத்தி சம்பவம்: குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 
வாச்சாத்தி சம்பவம்: குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி சந்தன மரங்கள் பதுக்கியதாக தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது கிராம மக்களின் வீடுகளை அடித்து நொறுக்கியதுடன் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தனர். தமிழகத்தில் இந்த சம்பவம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 269 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து அவர்களுக்கு 2 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கி கடந்த 2011 ஆம் ஆண்டு தருமபுரி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 27 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. 

விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி வேல்முருகன் இன்று உத்தரவிட்டுள்ளார். 

குற்றவாளிகள் 269 பேரில் 54 பேர் உயிரிழந்த நிலையில் 215 பேரும் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளார். 

மேலும் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குற்றவாளிகளிடம் இருந்து தலா ரூ.5 லட்சம் வசூலிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை அல்லது சுய வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இதுவரை என்ன இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் வாச்சாத்தி கிராமத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி வேல்முருகன், வாச்சாத்தி கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com