
மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்குத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. லட்சக்கணக்கில் இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொள்வதால் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அதிமுகவின் மதுரை மாநாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி காரைக்குடியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் கடந்த 16 ஆம் தேதி சென்னை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதிமுக மாநாடு நடைபெறும் இடம், விமான நிலையம் அருகே உள்ள பாதுகாக்கப்பட்டபகுதி. இங்கு, உயரமான விளம்பர பதாகைகள் அமைக்கக் கூடாது, பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் மாநாடு நடத்த விமான நிலையத்தின் தடையின்மை சான்றை அதிமுகவினர் பெறவில்லை. எனவே, அதிமுக மாநாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எஸ். எஸ். சுந்தர், டி. பரதசக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிமுக தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜயநாராயணன், மாநாட்டில் எவ்வித வெடி பொருள்களும் பயன்படுத்தப்படாது என உறுதி அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதி பதிகள், 'அதிமுக மாநாடு குறித்து 4 மாதத்துக்கு முன்பே அறிவிப்பு வெளியாகிவிட்டது. அனுமதியும் முறையாக பெறப்பட்டுவிட்டது. இனிமேல் எவ்வாறு தடை விதிக்க முடியும்?' எனக் கூறி , மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க | விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழக விமானி மாரடைப்பால் மரணம்!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...