சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு!

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் சுமார் 3,500 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் சுமார் 3,500 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் சுமார் 3,500 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் நலனில் அக்கறையும், கருணை உள்ளமும் கொண்ட முதல்வர், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் நீண்ட நாள் கோரிக்கையினை பரிசீலனை செய்து ஊதிய உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

முந்தைய ஆட்சியாளர்களின் 10 ஆண்டு கால திறமையற்ற, செயலற்ற நிர்வாகத்தின் காரணமாக, சர்க்கரை ஆலைகள் அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையினை சரிசெய்யும் நோக்குடனும், சர்க்கரைத்துறையின் மீது தனிக்கவனம் செலுத்தும் விதமாகவும் சர்க்கரைத் துறையினை வேளாண்மை-உழவர் நலத் துறைக்கு மாறுதல் செய்ய முதல்வர் உத்தரவிட்டார். சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் பலனாக கரும்பு சாகுபடி பரப்பு 95,000 எக்டர் பரப்பிலிருந்து 1,50,000 எக்டர் பரப்பிற்கு அதிகரித்துள்ளதுடன், சர்க்கரை கட்டுமானமும் 9.27 சதவீதமாக அதிகரித்துள்ளது.

செயலற்ற அதிமுக அரசு கரும்பு நிலுவைத் தொகையாக சுமார் ரூ.675.52 கோடியை விட்டுச்சென்ற நிலையில், தற்போது முதல்வர் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு கிரைய தொகையும், தொழிலாளர்களுக்குரிய ஊதிய நிலுவைத் தொகையையும் உரிய நேரத்தில் வழங்கி வருகிறார். மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மட்டுமே லாபத்தில் இயங்கி வந்த நிலையை மாற்றி தற்போது 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் லாபகரமாக இயங்கி வருகிறது. 

மேலும், இவ்வரசு பொறுப்பேற்றவுடன் எடுத்து வரும் தொடர் நவீன மயமாக்கல் நடவடிக்கையின் காரணமாக அனைத்து கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் பிழிதிறன் உயர்வினால் நஷ்டம் ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக குறைந்து வருகிறது. கரும்பு விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் உற்பத்தி ஊக்கத் தொகை. சிறப்பு ஊக்கத் தொகை, கரும்பு நிலுவைத் தொகை, ஊதியம், போனஸ், அத்தியாவசிய செலவினங்களுக்கு மொத்தமாக ரூ.1223.59 கோடி அளவிற்கு முதல்வர் வழங்கியுள்ளார்.

மேலும், சர்க்கரை ஆலையினை மேம்படுத்தும் பொருட்டு எம்.ஆர்.கே. மற்றும் கள்ளக்குறிச்சி-1 சர்க்கரை ஆலைகளில் எத்தனால் ஆலை அமைக்கும் பணியும் கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட இணை மின் திட்ட பணிகளுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு, மீதமுள்ள 6 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும் இணை மின்திட்ட பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

செயலற்ற தொழிலாளர் விரோத அதிமுக அரசு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட ஊதிய உயர்வு வழங்காமல் மறுத்து வந்தது. சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் கோரிக்கையை முதல்வர் கருணையுடன் பரிசீலனை செய்து. தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு வழங்கும் நோக்குடன். குழு ஒன்று அமைத்து, குழுவின் அறிக்கையினை பெற்று அதன் அடிப்படையில் தற்போது ஊதிய உயர்வு வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வின் மூலம் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 35% அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதுடன் 30.09.2022 வரையிலான காலத்திற்கு நல்லெண்ண தொகையாக (Goodwill amount) நிரந்தர தொழிலாளி ஒருவருக்கு ரூ.40,000 முதல் ரூ.50,000 மற்றும் பருவகால தொழிலாளிக்கு ரூ.32,000 முதல் ரூ.40,000 வரையில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 01.10.2022 முதல் தற்போது வரை உள்ள காலத்திற்கு நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுத்துவரும் சூழ்நிலையில் அனைத்து தொழிவார்களும் பணியாளர்களும் தற்போது முதல்வர் வழங்கியுள்ள ஊதிய உயர்வினை ஏற்று அனைத்து கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை மேலும் லாபகரமாக இயக்கிட தனது பங்களிப்பினை வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com