
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து - லாரி மோதிக் கொண்ட விபத்தில் இருவர் சனிக்கிழமை காலை பலியாகினர்.
சென்னையிலிருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு அறந்தாங்கிக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஒட்டிச சென்றார்.
இப்பேருந்து சனிக்கிழமை காலை கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள பாலி சிறப்புக் காவல் படை எதிரே செல்லும்போது ஓட்டுநர் மணிகண்டன் தூக்க கலகத்தில் இருந்ததால், சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி, பின்பு வலதுபுறச் சாலைக்கு பேருந்து தாறுமாறாகச் சென்று எதிரில் திருச்சியிலிருந்து பிகார் மாநிலத்துக்கு இரும்புப்பட்டைகளை ஏற்றிச்சென்ற லாரியின் மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் பேருந்து மற்றும் லாரியின் முகப்புப் பகுதி அப்பளம் போல் நொறுங்கி இடர்பாடுகளுக்குள் சிக்கியது .இதில் தனியார் பேருந்து ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் லாரி ஓட்டுநரான பிகார் மாநிலம் சாரன் பொகரெரா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரும் கடும் இடர்பாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்து வாகனங்களிலேயே பலியாகினர்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த அறந்தாங்கியைச் சேர்ந்த தினேஷ்காந்தி, உமா மகேஸ்வரி, சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ரமேஷ், கொடைக்கானல் டர்னர்புரத்தைச் சேர்ந்த விமல் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு தீவிர சிகிச்சைய ளிக்கப்பட்டது.
இதில் தினேஷ்காந்தி, உமாமகேஸ்வரி உள்ளிட்ட 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் உயிரிழந்த இரு ஓட்டுநர்களின் உடல்களும் கடும் இடர்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட நிலையில், தகவலறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று 4 கிரேன் இயந்திரங்கள் மூலம் விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களையும் தனித்தனியே பிரித்தெடுத்து, இறந்தவர்களின் உடல்களை சுமார் 2 மணி நேரம் போராடி மீட்டனர்.
சென்னை - திருச்சி நான்கு வழிச் சாலையில் நடந்த விபத்தின் காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு காவல் துறையினர் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனர். இதனால் போக்குவரத்து சீரானது.
தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் அந்த சாலையில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியது .
இவ்விபத்து குறித்து தகவலறிந்த எடைக்கல் காவல் துறையினர் நிகழ்விடம் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற் கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.