சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசியுள்ளார்.
சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு குறித்து முதல்வரிடம் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.
'தமிழகத்தில் வன்னியர், தலித் ஆகிய இரு சமுதாயங்கள் தான் பின்தங்கியுள்ளன. இந்த இரு சமுதாயங்களை தமிழகத்தில் 40% உள்ளன. வன்னியர் சமூகத்திற்கு இந்த இடஒதுக்கீடு அளிப்பதன் மூலமாக தமிழ்நாடும் வளர்ச்சி பெறும். இந்த இடஒதுக்கீட்டினால் யாருக்கும் பாதிப்பு இல்லை, எந்த சமூகத்திற்கும் எதிரானதும் இல்லை.
மேலும் தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டம், அரியலூர் பாசனத் திட்டம் ஆகியவற்றை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
மேலும் தமிழகத்தில் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. தமிழக அரசு மாதம் ஒருமுறை இதுகுறித்து ஆய்வு செய்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கூறினோம்' என்றார்.
10.5% இட ஒதுக்கீடு
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்க முந்தைய அதிமுக அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை திமுக அரசும் பின்பற்றியது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில்கொண்டே இந்தச் சட்டம் இயற்றப்பட்டதாக சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
அதன்படி இந்த சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட, மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றமும் மதுரைக்கிளையின் தீர்ப்பை உறுதி செய்தது. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு செல்லாது என்று அறிவித்தது.
எனினும், வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடை செயல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில், உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதை சுட்டிக்காட்டி மீண்டும் சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.