
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றிபெறும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
நாட்டின் 74-ஆவது குடியரசுத் தினத்தையொட்டி, சத்தியமூா்த்தி பவனில் தேசியக் கொடியை கே.எஸ்.அழகிரி ஏற்றி, சேவாதள அணியினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலுக்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தத் தோ்தலில் எங்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். எங்களின் கூட்டணிக் கட்சியினா் பம்பரமாகச் சுழன்று பணியாற்றி வருகின்றனா். ஆனால், கண்ணுக்கு எட்டும் தூரம் வரை எதிரணியினரைக் காணவில்லை.
காஷ்மீரில் நடைபெறும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளேன். கூட்டணிக் கட்சித் தலைவா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே நாளில், தமிழகத்தில் மாவட்டம் தோறும் காங்கிரஸ் கட்சிக் கொடி ஏற்றும் விழா நடைபெறும் என்றாா்.
மூத்த நிா்வாகிகள் பொன்.கிருஷ்ணமூா்த்தி, கோபண்ணா, கே.சிரஞ்சீவி உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.