47 வருடங்களுக்குப் பின் சந்தித்த பள்ளித் தோழிகள்!

மறக்க முடியாத பருவம் பள்ளி பருவம்; மலரும் நினைவுகளாய் என்றும் மனதில் நிற்கும்.
47 வருடங்களுக்குப் பின் சந்தித்த பள்ளித் தோழிகள்!
Published on
Updated on
1 min read

நாமக்கல்: மறக்க முடியாத பருவம் பள்ளி பருவம்; மலரும் நினைவுகளாய் என்றும் மனதில் நிற்கும். கடந்த 1975  ஆம் ஆண்டு நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்த மாணவிகள்( தோழிகள்) 47 வருடங்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல்லில் ஒன்றிணைந்தனர். 

தங்கள் பள்ளி பருவ காலத்தையும்,  காதல் வாழ்க்கை, கல்யாண வாழ்க்கை காலங்களையும் நினைத்து பார்த்து ஒருவருக்கொருவர் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

நாமக்கல், சேலம், கோவை, திருச்சி, சென்னை மட்டுமின்றி, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிப்போரும் பள்ளித் தோழிகளைக்  காண வந்தனர்.

அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்று சந்தித்து மகிழ வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். மதியம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி பாசத்தை வெளிப்படுத்தினர். 

தோழிகள் மட்டுமல்ல அவர்களுடைய குடும்பத்தினரும் இந்த விழாவில் பங்கேற்றனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற அரசுத்துறை அதிகாரியான பிரேமலதா என்பவர் கூறியது: 

47 வருட பந்தம்; இது நாளும் தொடரும் சொந்தம். கடந்த ஆண்டு இதே நாளில் 1975-76 இல் 11-ஆம் வகுப்பு படித்த தோழிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை நானும், பத்மா, சுமதி உள்ளிட்ட சிலரும்  மேற்கொண்டோம். கைபேசி வாயிலாக அனைவருடைய தகவல் தொடர்பு எண்களை அறிந்து அவர்களை தொடர்பு கொண்டு இவ்வாறான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம். 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தோழிகள் சந்திப்பு ஒன்றை நடத்திய போதும் பலரால் அதில் பங்கேற்க முடியவில்லை. இந்த முறை 75-க்கும் மேற்பட்டோர், இது நம்முடைய 47 வருட பந்தம் என்ற இவ்விழாவில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளனர். 

அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டோம். அனைவரும் ஆயுள், ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொண்டோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com