
அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், மாநகர் மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் விலைவாசி உயர்வைக் கண்டித்து குமரன் நினைவகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கழக தேர்தல் பிரிவு செயலாளரும், மாநகர் மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்துப் பேசியதாவது:
திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, மின் கட்டணம், வீட்டு வரி உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அதிமுகவுக்கு துரோகம் செய்து சென்றவர்கள் அனைவரும் மிக விரைவில் சிறைக்குச் செல்வார்கள்.
படிக்க: பார்வையற்றோருக்கான நோட்டுகள் தற்போது சாத்தியமில்லை: ஆர்பிஐ
இந்தியாவில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் ஊழல் நிறைந்தது திருப்பூர் மாநகராட்சியாகும். இந்த மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் கேட்பதால் சாலை அமைப்பது உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படுவதில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் 4 ஆவது குடிநீர் திட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டது. பொலிவுறு நகரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில் திருப்பூரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றது. ஆனால் கடந்த இரண்டரை ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. கடந்த ஆட்சியில் புதுப்பிக்கப்பட்ட திருப்பூர் பழைய பேருந்து நிலையத்துக்கு குமரன் பெயரை சூட்டுவதற்குப் பதிலாக கருணாநிதியின் பெயரை வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
திருப்பூரில் பணியாற்றி வந்த தென் மாவட்டத் தொழிலாளர்கள் வீட்டு வாடகை செலுத்த முடியாமல் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர். ஆகவே, ஏழை, எளியோரைப் பாதிக்கும் இந்த ஆட்சி மிக விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.என்.விஜயகுமார், சி.மகேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...