
காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. பாடல் பெற்ற தலம், நளச் சக்கரவர்த்திக்கு தோஷ நிவர்த்தி கிடைத்த தலம் என்ற பெருமைகள் உள்ளன.
இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சந்நிதி கொண்டுள்ளார். சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் தலமாக இது விளங்குகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது.
முறைப்படி உற்சவம் தொடங்கும் வகையில் செவ்வாய்க்கிழமை காலை 5.30-க்கு மேல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 7.30 மணிக்கு மேல் கம்பத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்துக்கு முன்னதாக கம்பத்தில் ஏற்றப்படும் கொடியை பல்லக்கில் வைத்து நான்கு வீதிகளின் வழியாக கோயிலுக்கு கொண்டுவந்தனர்.
தொடர்ந்து கொடிக் கம்பத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன. இக்கோயிலில் உள்ள மூலவரான ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரருக்கு தர்பை புல் விசேஷமானது. இதையொட்டி கொடிக் கம்பத்தை சுற்றி தர்பை கட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.
கொடியேற்ற நிகழ்வின்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பஞ்சமூர்த்திகளான ஸ்ரீ சொர்ணகணபதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள், ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வீதியுலா எழுந்தருளினர்.
இதையும் படிக்க: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ கொடியேற்றம்!
கொடியேற்ற நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாக அதிகாரி கே.அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முக்கிய நிகழ்வான தேரோட்டம் 30-ஆம் தேதியும், தங்க காக வாகனத்தில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் 31-ஆம் தேதி வீதியுலாவும், ஜூன் 1-ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.