
செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவுப்படி வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருசிலர் உயிரிழந்தனர். மரக்காணத்தில் இதுவரை கள்ளச்சாராயத்துக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.
இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திலும் விஷச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்தனர். தற்போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
இதனால், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (மே 15) நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
விஷச்சாராய வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும் என முதல்வர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.