சக்கரம் நமக்குத்தான்.. புயல் சின்னம் குறித்த புதிய அறிவிப்பு

சக்கரம் நமக்குத்தான்.. புயல் சின்னம் குறித்த புதிய அறிவிப்பு

தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகத்துக்கு வருமா அல்லது ஆந்திரம் - வங்கதேசம் நோக்கி நகருமா என்ற சந்தேகம் எழுந்திருந்த நிலையில், சக்கரம் நமக்குத்தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது. 

இந்தப் புயல் சின்னம் தமிழகத்துக்கு வருமா அல்லது ஆந்திரம், வங்கதேசம் நோக்கி நகருமா என்பது இன்னும் இரண்டு நாள்களில் தெரியவரும் என்று திங்கள்கிழமை சென்னை வானிலை மையம் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

இந்த நிலையில், சக்கரம் நமக்குத்தான் என்று வானிலை நிலவரங்களை கணித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,  சக்கரம் நமக்குத்தான். 

இது வரை அற்புதமான பருவமழையாக இருந்து வருகிறது, சிறிய தீவிரமான காற்றழுத்தங்களுடன் தினந்தோறும் மழை பெய்து வருகிறது மற்றும் நவம்பர் 29 முதல் டிசம்பர் முதல் வாரத்தில் மழை அதிகரிக்கும்.

அனைவரின் கவனமும் புதிதாக உருவாகியிருக்கும் #சக்கரத்தின் மீதே உள்ளது, இன்னும் 6 நாள்களில் தடம் மாறி திருப்பங்கள் நடக்கும் !!! புயல் சின்னம் பயணிக்கும் பாதையை உறுதிப்படுத்த இன்னும் 2 நாள்கள் தேவை. 

எது எப்படி நடந்தாலும், ஒரு விஷயம் மட்டும் உறுதி.. நமக்கு (வட தமிழகத்துக்கு) கனமழை உண்டு என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், புயல் சின்னம் தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

முன்னதாக, இந்த புயல் சின்னம், தீவிரமடைந்து புயலாக மாறும் என்றும், இந்தப் புயலுக்கு ‘மிக்ஜம்’ என்று பெயா் சூட்டப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்ததாவது, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக். 21-இல் தொடங்கியது. தொடா்ந்து காற்று சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சிகளால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தற்போதும் குமரிக் கடல் பகுதியில் காற்று சுழற்சியும், அரபிக் கடல் பகுதியில் சோமாலியா அருகே புயல் சின்னமும், குஜராத்தில் நிலபரப்பில் காற்று சுழற்சியும் நிலவுகிறது.

இதனால் நிலநடுக்கோட்டு பகுதியில் இருந்தும், வங்கக் கடலில் இருந்தும் மழையைத் தரும் காற்று தமிழகத்தின் ஊடாகச் செல்வதால் வடதமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவாலாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆங்காங்கே பலத்த மழை கொட்டியது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ. 28-டிச. 3) வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்துக் கூறியபடி, தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் திங்கள்கிழமை புயல் சின்னம் உருவாகியுள்ளது. தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இருக்கும் இந்தப் புயல் சின்னம், வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் வியாழக்கிழமை (நவ. 29) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது அடுத்த 2 நாள்களில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்தப் புயலுக்கு மியான்மா் நாடு பரிந்துரை செய்த ‘மிக்ஜம்’ என்ற பெயா் சூட்டப்படும். இந்தப் புயல் தமிழகத்துக்கு வருமா அல்லது ஆந்திரம், வங்கதேசம் நோக்கி நகருமா என்பது இன்னும் இரண்டு நாள்களில் துல்லியமாகத் தெரியவரும் என்று சென்னை வானிலை மையம் மேலும் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com