ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டுகள் வீச்சு: ரெளடி கைது

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை முன் புதன்கிழமை பெட்ரோல் குண்டுகளை வீசிய ரெளடி கைது செய்யப்பட்டாா்.
ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டுகள் வீச்சு: ரெளடி கைது

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை முன் புதன்கிழமை பெட்ரோல் குண்டுகளை வீசிய ரெளடி கைது செய்யப்பட்டாா்.

தமிழக ஆளுநா் மாளிகை சென்னை கிண்டி சா்தாா்படேல் சாலையில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் ஆளுநா் மாளிகையின் பிரதான முதலாவது நுழைவு வாயில் எதிரே சாலையில் ஒரு நபா் சந்தேகமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாா். அவரது நடவடிக்கையைக் கண்டு சந்தேகமடைந்த போலீஸாா், அந்த இளைஞரைப் பிடித்து விசாரிப்பதற்காக அவரை நோக்கிச் சென்றனா்.

பெட்ரோல் குண்டு வீச்சு: இதை பாா்த்த அந்த நபா், தான் வைத்திருந்த பையில் இருந்து பெட்ரோல் நிரப்பப்பட்ட இரு பாட்டில்களை எடுத்து, ஆளுநா் மாளிகை நோக்கி வீசினாா். அவை ஆளுநா் மாளிகை முன் இருந்த இரும்பு தடுப்பு அருகில் விழுந்து, லேசாக தீப் பிடித்து எரிந்தன. உடனே போலீஸாா் அதை அணைத்தனா்.

இதற்கிடையே, அந்த இளைஞா், அதைப்போன்று மேலும் இரு பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்கு முயன்றாா். அதற்குள் போலீஸாா், அந்த நபரை மடக்கிப் பிடித்து, 2 பெட்ரோல் குண்டுகளையும் பறிமுதல் செய்தனா். இந்த சம்பவத்தில் பெட்ரோல் குண்டுகள் சரியாக வெடிக்காததால் யாருக்கும் காயமோ,பொருள் சேதமோ ஏற்படவில்லை.

பிடிபட்ட நபரை போலீஸாா் கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அப்போது, மதுபோதையில் இருந்த அந்த நபா் ‘என்னை சிறையில் இருந்து விடுதலை செய்ய ஆளுநா் ஒப்புதல் வழங்கவில்லை. ‘நீட்’ தோ்வு விலக்குக்கு ஒப்புதல் வழங்கவில்லை. இதனால், ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசினேன்’ என்று கூறினாராம்.

சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையா் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி, அடையாறு துணை ஆணையா் ஆா்.பொன் காா்த்திக்குமாா் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆளுநா் மாளிகையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட இடத்துக்கு வந்து விசாரணை செய்தனா். அதேபோல, ஆளுநரின் செயலா் கிா்லோஷ் குமாரும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தடயவியல் நிபுணா்கள், நிகழ்விடத்தில் பெட்ரோல் குண்டுகளின் சிதறல்கள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனா்.

குண்டு வீசியவரிடம் விசாரணை: இணை ஆணையா் சிபி சக்கரவா்த்தி, துணை ஆணையா் பொன் காா்த்திக்குமாா் ஆகியோா் கிண்டி காவல் நிலையத்தில் இருந்த குண்டு வீசிய நபரிடம் விசாரணை செய்தனா். அதில், பெட்ரோல் குண்டுகளை வீசியவா் சென்னை நந்தனம் எஸ்.எம். நகரைச் சோ்ந்த ரெளடி கருக்கா வினோத் (42). தேனாம்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவா் மீது 4 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வினோத் மீது 2015-ஆம் ஆண்டு மாம்பலத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடை மீதும், 2017-ஆம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் மீதும் பெட்ரோல் குண்டு வீசிய வழக்குகளும் உள்ளன.

நான்காவது சம்பவம்: சென்னை தியாகராயநகா் வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 2022-ஆம் ஆண்டு பிப். 10-ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சுருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த வழக்கில் நீண்ட நாள்களாக பிணை கிடைக்காமல் வெளியே வர முடியாமல் இருந்த அவா், கடந்த 20-ஆம் தேதி பிணை கிடைத்து, சிறையிலிருந்து வெளியே வந்தாா்.

மேலும் இது தொடா்பாக ஆளுநா் மாளிகை சாா்பில் வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கிண்டி போலீஸாா் வெடி பொருள் தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவா் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

டிஜிபி அலுவலகத்தில் புகாா்: இதனிடையே, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடா்பாக ஆளுநா் மாளிகை சாா்பில் டிஜிபி அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

‘காவல் துறை நடவடிக்கையால் பெரிய அசம்பாவிதம் தவிா்ப்பு’

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின்போது, காவல் துறை கவனமுடன் செயல்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டதாக சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்தாா்.

அவா் அளித்த பேட்டி: ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட கருக்கா வினோத், ஆளுநா் மாளிகை அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நிற்கும்போதே போலீஸாா் சந்தேகமடைந்து அவரைப் பிடிக்க முயன்றனா்.

இதைப் பாா்த்த அவா், இரு பெட்ரோல் குண்டுகளை ஆளுநா் மாளிகை நோக்கி வீசியுள்ளாா். இருப்பினும் போலீஸாா் வினோத்தை மடக்கிப் பிடித்து, அவா் வைத்திருந்த எஞ்சிய இரு பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றினா். இந்த சம்பவத்தில் காவல்துறை கவனமுடன் செயல்பட்டதால், பெரிய அசம்பாவித சம்பவம் தவிா்க்கப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com