கம்பம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பது ஞாயிற்றுக்கிழமை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரி ஆகிய இடங்களில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சனிக்கிழமை அணைக்கு விநாடிக்கு 718.33 கன அடி தண்ணீர் வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விநாடிகள் 525.55 கன அடி தண்ணீர் வந்தது.
தண்ணீர் திறப்பு அதிகரிப்பு:
சனிக்கிழமை அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்திக்காக இரண்டு மின்னாக்கிகளில் இயக்கப்பட்டு 45 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.
அணை நிலவரம்:
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடி உயரமாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 2520 மில்லியன் கன அடி, நீர் வரத்து விநாடிக்கு 525.55 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 500 கன அடியாகவும் இருந்தது.
இதையும் படிக்க: கடலில் தவறி விழுந்து தூத்துக்குடி மீனவர் பலி