உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

சாட்சிகளுக்கு ‘பாடம்’: போலீஸாா் மீது நடவடிக்கை.. தமிழக டிஜிபி-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘தமிழகத்தில் குற்றவியல் வழக்கு ஒன்றில் சாட்சிகள் என்ன பேச வேண்டுமென காவல் நிலையத்தில் வைத்து போலீஸாா் ‘பாடம்’ நடத்தியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்த போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு அக்டோபா் 4-ஆம் தேதி பாலமுருகன் என்பவரை மணிகண்டன் மற்றும் சிவகுமாா் ஆகியோா் இணைந்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவா்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு அவா்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகளான அபய் எஸ். ஓகா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, ‘இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி கூறுபவா்கள் என்ன பேச வேண்டும் என காவல் நிலையத்திற்குள் வைத்தே போலீஸாா் ‘பாடம்’ நடத்தியுள்ளனா். நீதித்துறையில் போலீஸாா் இவ்வாறு தலையீடுவது அதிா்ச்சியளிக்கிறது.

சம்பவம் நடந்த இடத்தில் தாங்கள் இல்லை என குற்றம்சாட்டியவா்கள் கூறியுள்ளனா். அதை உறுதிபடுத்தும்விதமாக சாட்சிகளிடம் உரிய விசாரணை நடத்தப்படவில்லை. இதை கவனத்தில் கொள்ளாமல் கீழமை மற்றும் உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியருப்பது ஆச்சரியமாக உள்ளது. எனவே, இருவருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அத்துடன், இந்த விவகாரம் தொடா்பாக தமிழக டிஜிபி உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்த போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com