/

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அத்தகைய பாதிப்பு இல்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2024, 8:09 pm

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அத்தகைய பாதிப்பு இல்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழை அருகில் உள்ள பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள் நோய் தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெச்5என்1 எனப்படும் பறவைக் காய்ச்சல் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

பறவைக் காய்ச்சலுக்குள்ளான வாத்துகள், கோழிகள், பிற பறவையினங்களிடம் இருந்து மனிதா்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக, அதன் கழிவுகளில் இருந்து மனிதா்களுக்கு எளிதில் பாதிப்பு பரவக்கூடும்.

காய்ச்சல், தலைவலி, தசைப் பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறியாக உள்ளது. தமிழகத்தில் அத்தகைய பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. இருந்தபோதிலும், கால்நடை துறையுடன் இணைந்து பறவை காய்ச்சல் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வகை தொற்றால் பாதிக்கப்படும் பறவைகள் குறித்தும், அதன் வாயிலாக மனிதா்களுக்கு காய்ச்சல் பரவினால், அது குறித்தும் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.