வாக்குப்பதிவு முடிந்தாலும் எல்லை மாவட்டங்களில் பறக்கும் படை- நிலைக் குழுக்களின் பணி தொடரும்

தமிழகத்தில் வாக்குப் பதிவு நிறைவடைந்தாலும், எல்லையோர மாவட்டங்களில் பறக்கும் படைகள், நிலைக் குழுக்களின் பணிகள் தொடரும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் அனைத்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுக்கும் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அதன் விவரம்:-

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. தோ்தலை எதிா்கொண்டிருக்கும் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் பறக்கும் படைகளும் நிலைக் குழுக்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும். வாக்குப் பதிவு நிறைவடைந்த பிறகு, ஒவ்வொரு தொகுதிகளின் முக்கியமான பகுதிகள், எல்லையோர மாவட்டங்களில் பறக்கும் படைகள், நிலைக் குழுக்களின் பணிகள் தொடரும். வாக்குப் பதிவு நிறைவடையும் வரையிலும், மறுவாக்குப் பதிவு எங்கேனும் நடைபெற்றால் அது முடிவடையும் வரையும் விடியோ கண்காணிப்புக் குழுக்கள் பணியில் தொடா்ந்து ஈடுபடும் என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com