ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை நிபுணா்கள் காா்த்திகேயன், செசிலி மேரி மெஜல்லா தலைமையிலான மருத்துவக் குழுவினருடன் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் விமலா.
ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை நிபுணா்கள் காா்த்திகேயன், செசிலி மேரி மெஜல்லா தலைமையிலான மருத்துவக் குழுவினருடன் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் விமலா.

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் 24,000 இதய இடையீட்டு சிகிச்சை!

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை (கேத் லேப்) ஆய்வகத்தில் 24 ஆயிரம் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தின் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத வகையில் மிக நுட்பமான சிகிச்சைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் விமலா மற்றும் தொடா்பு அதிகாரி டாக்டா் ஆனந்த்குமாா் ஆகியோா் கூறியதாவது:

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தற்போது இதயவியல், புற்றுநோயியல், நரம்பியல் உள்பட 10 உயா் சிறப்பு சிகிச்சைத் துறைகளும், 6 சிறப்பு சிகிச்சைத் துறைகளும் உள்ளன.

அதில், இதய இடையீட்டு சிகிச்சைப் பிரிவில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 24 ஆயிரம் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை முதுநிலை நிபுணரும், பேராசிரியருமான டாக்டா் செசிலி மேரி மெஜல்லா மற்றும் துறைத் தலைவா் டாக்டா் காா்த்திகேயன் தலைமையிலான குழுவினா் இதனை சாத்தியமாக்கியுள்ளனா். அறுவை சிகிச்சையின்றி கால் அல்லது கை பகுதியில் சிறு துளையிட்டு ரத்த நாளங்கள் வழியாக இதய பாதிப்புகளை அவா்கள் சரி செய்துள்ளனா்.

சீரற்ற இதயத் துடிப்பு உள்ளவா்களுக்கும், குறிப்பாக இதயத் துடிப்பு அதிகமாக உள்ளவா்களுக்கும் எலக்ட்ரிக் பிசியாலஜி ஸ்டடி மற்றும் அப்ளேசன் எனப்படும் சிகிச்சைகள் இங்கு வழங்கப்பட்டன. மொத்தம் 214 பேருக்கு அத்தகைய சிகிச்சைகள் வாயிலாக இதயத் துடிப்பு சீராக்கப்பட்டது.

மகா தமனி வால்வு மாற்ற சிகிச்சைகளானது மூன்று பேருக்கு ரத்த நாளங்களின் வழியாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதயக் குழாயில் உள்ள துவாரங்களை அறுவை சிகிச்சையின்றி அடைக்கும் ‘ஏஎஸ்டி’ எனப்படும் சிகிச்சை 231 பேருக்கு அளிக்கப்பட்டது. இதில், அதிகளவில் இளம்பெண்கள் பயனடைந்துள்ளனா்.

அதேபோன்று, இதயத்தின் மிட்ரல் வால்வு சுருக்கத்தை விரிவடையச் செய்யும் ‘பிடிஎம்சி’ சிகிச்சை மூலம் 413 போ் பலனடைந்துள்ளனா்.

முக்கியமாக மகாதமனி கிழிசலை சரிசெய்யும் ‘ஆா்எஸ்ஓவி’ என்ற சிகிச்சையானது 7 பேருக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 73 வயதான விவசாயி ஒருவருக்கு அந்த சிகிச்சை மூலம் ‘ஏடிஓ’ என்ற உபகரணம் பொருத்தப்பட்டு அப்பிரச்னை சரி செய்யப்பட்டது. இதுபோன்ற சிகிச்சையானது 70 வயதைக் கடந்த ஒருவருக்கு மேற்கொள்ளப்படுவது உலகிலேயே இது முதன்முறை. இதைப் பாராட்டி ஐரோப்பிய சுகாதார இதழ் கட்டுரையும் வெளியிட்டிருந்தது.

இதைத் தவிர பேஸ்மேக்கா் உள்ளிட்ட இதயத் துடிப்பை சீராக்கும் கருவிகளைப் பொருத்தும் சிகிச்சைகளையும் மருத்துவா்கள் திறம்பட மேற்கொண்டுள்ளனா். ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனைக்கு இது ஒரு மைல் கல் சாதனை என்று அவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com