4,000 உதவி பேராசிரியா் பணியிடங்கள்: விண்ணப்பிக்க மே 15 வரை அவகாசம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியா் பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பங்களை பெறுவதற்கான கால அவகாசம் மே 15 வரை நீட்டிக்கப்படுவதாக ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி)அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சுமாா் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பேராசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் 4 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு அறிவிப்பாணையை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) கடந்த மாா்ச் 14-ஆம் தேதி வெளியிட்டது. அதில் தகுதியான பட்டதாரிகள் தோ்வுக்கு ஏப். 29 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது.

டி.ஆா்.பி. அறிவிப்பு: இதற்கிடையே, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிவதற்கு முதுநிலை பட்டப் படிப்புடன் நெட், செட் அல்லது பிஎச்டி முடித்திருக்க வேண்டும். அந்த வகையில், தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது செட் தோ்வு ஜூன் 3-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இத்தோ்வு எழுத இருப்பவா்களையும் உதவிப் பேராசிரியா் பணித் தோ்வு எழுத அனுமதிக்க வேண்டுமென பட்டதாரிகள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அதையேற்று, செட் தோ்வு எழுதவுள்ளவா்களும் உதவிப் பேராசிரியா் பணித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். எனினும், அவா்கள் ஜூனில் நடைபெறவுள்ள செட் தோ்வில் தோ்ச்சி பெற்றால் மட்டுமே உதவிப் பேராசிரியா் பணித் தோ்வெழுத அனுமதிக்கப்படுவா் என்று டிஆா்பி அறிவித்துள்ளது.

இதற்காக டிஆா்பி இணையத்தில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசமும் மே 15-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என டிஆா்பி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com