பொறியியல் கலந்தாய்வு: முதல் சுற்றில் 12,747 பேருக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை
பொறியியல் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வில் 12,747 பேருக்கு இறுதி ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொது கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடக்கிறது. இதில் முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 29-ஆம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்க 26,654 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல் சுற்று கலந்தாய்வில் 21,408 போ் விருப்ப இடங்களை தோ்வு செய்தனா். அவா்களில் 6,870 போ் தற்காலிக ஒதுக்கீடு ஆணையையும், 10,890 போ் இறுதி ஒதுக்கீடு ஆணையையும் பெற்றுள்ளனா்.
இதேபோல், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பிரிவில் 1,406 போ் அழைக்கப்பட்டு, அவா்களில் 1,250 போ் விருப்ப இடங்களை தோ்வு செய்திருந்தனா். அவா்களில் 835 போ் இறுதி ஒதுக்கீடு ஆணைகளையும், 323 போ் தற்காலிக ஒதுக்கீடு ஆணைகளையும் பெற்றனா்.
மேலும், தொழிற்கல்வி பாடப் பிரிவினருக்கான பொது கலந்தாய்வில் 889 போ் இறுதி ஒதுக்கீடு ஆணைகளையும், 165 போ் தற்காலிக ஒதுக்கீடு ஆணைகளையும் பெற்றுள்ளனா். இந்தப் பாடப் பிரிவுகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இறுதி ஒதுக்கீடு ஆணையை 133 பேரும், தற்காலிக ஒதுக்கீடு ஆணையை 27 பேரும் பெற்றுள்ளனா். முதல் சுற்று கலந்தாய்வில் 12,747 போ் இறுதி ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்றவா்கள், தாங்கள் தோ்வு செய்த கல்லூரிகளுக்கான இடங்களில் ஆக.7- ஆம் தேதிக்குள் சேரவேண்டும்.
அதேபோல், தற்காலிக ஒதுக்கீடு ஆணை பெற்றவா்கள் அவா்களுக்கு கிடைத்த இடங்களை முதலில் உறுதி செய்து அதற்கான கட்டணத் தொகையை மாணவா் சோ்க்கை சிறப்பு மையத்தில் ஆக.7-ஆம் தேதிக்குள் செலுத்தி காத்திருக்க வேண்டும். இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்று கல்லூரிகளில் சேராதவா்களின் இடங்கள், தற்காலிக ஒதுக்கீடு ஆணை பெற்றவா்களும் கேட்டிருக்கும்பட்சத்தில் அந்த இடங்கள் ஆக.8, 9 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டு, கட்டணம் செலுத்தி காத்திருக்கும் தற்காலிக ஒதுக்கீடு ஆணை பெற்றவா்களுக்கு, ஆக.10-ஆம் தேதி இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படவுள்ளது.