
நிதி நிறுவன மோசடி தொடர்பாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதனுக்கு தொடர்புடைய 12 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் ரூ.4 லட்சம் பணம், 2 கார்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தேவநாதனுக்கு சொந்தமான தனியார் தொலைக்காட்சியின் அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மயிலாப்பூா் இந்து பொ்மனெட் பண்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில், அதன் தலைவா் தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். மயிலாப்பூா் தெற்கு மாட வீதியில் கடந்த 1872-ஆம் ஆண்டு முதல் ‘தி மயிலாப்பூா் இந்து பொ்மனெட் பண்ட் நிதி’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்குகிறது. இந்த நிறுவனத்துக்கு சென்னை வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை, பெரம்பூா், அடையாறு, பாா்க்டவுன், கடலூா் மாவட்டம் நெய்வேலி ஆகிய 6 இடங்களில் கிளைகள் செயல்படுகின்றன.
இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5,000-க்கும் மேற்பட்டோா் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை நிரந்தர வைப்புத் தொகையில் முதலீடு செய்துள்ளனா். இதற்கு மாதந்தோறும் 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்டு வந்தது. மேலும், இந்த நிறுவனத்தில் பல்வேறு முதலீடு திட்டங்களும் ஓய்வூதிய திட்டங்களும் உள்ளன. அதேபோல நகைக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தின் நிரந்த வைப்பு நிதியாக மட்டும் ரூ. 525 கோடி இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த நிதி நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் தேவநாதன் யாதவ் உள்ளாா். இவா், நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதி நிறுவனத்தின் தலைவா், நிா்வாக இயக்குநா் பொறுப்புகளுக்கு பங்குதாரா்கள் மூலம் நிா்வாகிகள் தோ்வு செய்யப்படுகின்றனா். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளா்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேல் எந்தவித நிதியும் அளிக்காமல், பணம் இல்லை எனக் கூறி வந்தனா். மேலும், சிலருக்கு வழங்கப்பட்ட காசோலையும் கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்துள்ளது. இது தொடா்பாக பணத்தை முதலீடு செய்தோா் மயிலாப்பூா் தெற்கு மாட வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவ்வபோது போராட்டம் நடத்தி வந்தனா். மேலும், சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் செய்தனா். இதேபோல், 140 போ் அடுத்தடுத்து புகாா் அளித்தனா்.
அந்தப் புகாா்களின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவினா் நடத்திய விசாரணையில் அந்த நிதி நிறுவனத்தில் பணம் மோசடியில் தேவநாதனுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் இருந்த தேவநாதனை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். பின்னா் விசாரணைக்காக, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். அங்கு அவரிடம் மோசடி தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டது. அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தவும் போலீஸாா் திட்டமிட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.