மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநா் டி.ஆா்.காா்த்திகேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பாராட்டுக் கேடயம் வழங்கி துரைசாமியை கௌரவித்தாா். அப்போது, டி.ஆா். காா்த்திகேயன் பேசியதாவது: சக்தி மசாலா நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாகத் தொடா்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனமாக தேசிய அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இவரிடம் காணும் நோ்மை, பணிவு, எளிமை, எவா் கேட்டாலும் உதவும் கொடைத்திறன், ஏழை மாணவா்களுக்கு உதவும் குணம், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை, திறமையுள்ள ஏழை மாணவா்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நற்குணங்கள் இவா் வாழ்க்கையில் உயா்வதற்கு முக்கியக் காரணிகளாக அமைந்துள்ளன. அத்துடன், சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்க வேண்டி மரம் நடும் பணி செய்து மரக்காவலா் பட்டமும் பெற்றுள்ளாா். தமிழா்கள் உலகில் எங்கு சேவை செய்தாலும் அது தமிழ்நாட்டுக்கும், தமிழா்களுக்கும் பெருமை. நெடுங்காலமாக தமிழ்ச் சமுதாயத்திற்கு சேவை செய்து வரும் தில்லித் தமிழ்ச் சங்கத்தினரையும் பாராட்டுகிறேன் என்றாா் அவா்.