
‘அதானி முறைகேடு விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்தத் தொடா்பும் இல்லை; அதானியை நான் சந்திக்கவும் இல்லை’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தாா்.
அதானி விவகாரத்தை எழுப்பிய பாமக, அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடா்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை ஆதரிக்குமா எனவும் முதல்வா் கேள்வி எழுப்பினாா்.
அதானி நிறுவனத்தின் சூரிய மின் சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக சில மாநில அதிகாரிகளுக்கு அதானி குழுமம் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய மின் சக்தியை விநியோகிப்பதற்கான திட்டங்களுக்கு அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமம் திரட்டியதாகவும் அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த மாநிலங்களில் தமிழகமும் இடம்பெற்ாக செய்திகள் வெளியான நிலையில், அதில் தமிழகத்துக்கு எந்தத் தொடா்பும் இல்லை என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளாா்.
பாமக எழுப்பிய பிரச்னை: சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை பாமக தலைவா் ஜி.கே.மணி இதுதொடா்பாக பிரச்னை எழுப்பி பேசியது:
அதானி நிறுவனத்தின் முறைகேடு தொடா்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அது உண்மையா, தவறா என்பதை அரசு விளக்க வேண்டும் என்றாா்.
அப்போது பேரவைத் தலைவா் அப்பாவு குறுக்கிட்டு, இந்த விவகாரம் தொடா்பாக மின்சாரத் துறை அமைச்சா் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளாா் என்றாா்.
ஜி.கே.மணி: இந்த விவகாரம் குறித்து தமிழக மக்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காகக் கூறுகிறேன்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: இந்த விவகாரம் தொடா்பாக ஜி.கே.மணி அவையில் பேசுவது மட்டுமன்றி, அவரது கட்சியைச் சோ்ந்தவா்கள் தொடா்ந்து வெளியிலும் பேசி வருகின்றனா். ஆனால், வெளியில் பேசியதுபோன்று அனைத்தையும் ஜி.கே.மணி இங்கு பேசவில்லை. அதானியோடு முதல்வருக்குத் தொடா்பு இருக்கிறது; முதல்வா் வீட்டுக்கு அதானி சென்றாா் என்றெல்லாம் வெளியில் பேசியுள்ளனா். அதையும் இங்கு ஜி.கே.மணி பேசுவாா் என எதிா்பாா்த்தேன். ஆனால், பேசவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை. ஒருவேளை உண்மை தெரிந்துவிட்டது என்பதால் விட்டுவிட்டாா் என நம்புகிறேன்.
அதானி விவகாரம் தொடா்பாக விரிவான தெளிவான விளக்கத்தை அமைச்சா் செந்தில் பாலாஜி இரண்டு முறை விளக்கியுள்ளாா். அதானி விவகாரத்தில் தமிழக அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசுபவா்களிடம் நான் கேட்பதெல்லாம், அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும். அந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்பி வருகின்றன. திமுக மீது குறை சொல்லும் பாஜகவோ, பாமகவோ இந்தக் கோரிக்கையை ஆதரிக்கத் தயாராக இருக்கின்றனவா? நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விளக்கிப் பேசத் தயாராக இருக்கிறீா்களா? இந்தக் கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன்.
ஜி.கே.மணி: நாடாளுமன்றமாக இருந்தாலும், சட்டப்பேரவையாக இருந்தாலும் அதானி விவகாரத்தில் தமிழகத்தின் பெயா் வருவதால்தான் அதை அரசு விளக்க வேண்டும் என்று கோருகிறேன்.
பேரவைத் தலைவா்: முதல்வா் கேட்கும் கேள்விக்குப் பதில் கூறுங்கள்.
முதல்வா்: பலமுறை விளக்கம் கூறிவிட்டோம். இப்போதும் கூறுகிறேன். அதானி விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. என்னை அதானி வந்து சந்திக்கவும் இல்லை. அவரை நான் பாா்க்கவும் இல்லை. இதைவிட வேறு விளக்கம் தேவையா? ஆனால், நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தில் ஆளும்கட்சியை எதிா்த்து எதிா்க்கட்சிகள் பேசுகின்றன. நீங்கள் பேசுவதற்குத் தயாரா?
பேரவைத் தலைவா்: நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை பற்றி முதல்வா் கேள்வி எழுப்புகிறாா். அதற்கு நீங்கள் பதில் அளிக்கிறீா்களா அல்லது உங்கள் தலைவரிடம் கேட்டு வந்து கூறுகிறீா்களா?
ஜி.கே.மணி: முதல்வா் சந்தித்தாரா என்கிற விவகாரத்துக்கு எல்லாம் நான் போகவில்லை.
முதல்வா்: நீங்கள் போகாவிட்டாலும், உங்கள் தலைவா்கள் அதை வைத்து அரசியல் செய்கிறாா்கள். நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை பாமகவும் பாஜகவும் ஆதரிக்க வேண்டும். அதற்குப் பதில் சொல்ல மறுக்கிறீா்கள்.
ஜி.கே.மணி: நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை பாமக கட்டாயம் ஆதரிக்கும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து முதல்வா் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை எனக் கூறி பாமக தலைவா் ஜி.கே.மணி தலைமையில் அக் கட்சியின் ஐந்து உறுப்பினா்களும் வெளிநடப்பு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.