அதானியை முதல்வரின் மருமகன் சந்தித்தார்; மறுக்கமுடியுமா? - அண்ணாமலை கேள்வி

முதல்வர் சார்பில் ஐஏஎஸ் அதிகாரிகள், செயலாளர்களும் அதானியை சந்தித்ததாக அண்ணாமலை குற்றச்சாட்டு.
செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை
செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை
Published on
Updated on
1 min read

தொழிலதிபர் அதானியை முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் சந்தித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்வர் சார்பில் அவரைச் சார்ந்திருக்கக்கூடிய ஐஏஎஸ் அதிகாரிகளும் செயலாளர்களும் அதானியை சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதானியை தான் சந்திக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருந்த நிலையில், அண்ணாமலை இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

''திமுக அரசு அதானிக்கும் ஒப்பந்தம் கொடுத்துள்ளது என்பதை தொடர்ந்து பாஜக கூறிவருகிறது. இதற்கு அமைச்சர் ஒருவர் மறுப்பு தெரிவித்து, அந்த ஒப்பந்தம் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது என்கிறார். ஆனால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும் அதானிக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளது.

சட்டப்பேரவையில் முதல்வர் பேசும்போது, அதானியை சந்தித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைப்பதாகக் கூறுகிறார். அதானியை சந்திக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

அதானியை முதல்வர் சந்தித்தார் என்று பாஜக ஒருபோதும் கூறவில்லை. அதானியை சந்திப்பது குற்றமும் அல்ல. அதானிக்கு திமுக ஒப்பந்தம் கொடுத்துள்ளதா? இல்லையா? என்பது மட்டுமே எங்கள் கேள்வி.

முதல்வரின் மருமகன் அதானியை சந்தித்தார்

முதல்வரின் மருமகன் அதானியை சந்தித்தார் என்ற குற்றச்சாட்டை நாங்கள் (பாஜக) முன்வைக்கிறோம். உங்களைச் சார்ந்திருக்கக்கூடிய ஐஏஎஸ் அதிகாரிகள், செயலாளர்கள் அதானியை சந்தித்தனர்.

உங்கள் மருமகன் சந்திப்பது நீங்கள் சந்திப்பதைப்போன்றுதானே? உங்கள் மருமகன் சபரீசன் இதுவரை அதானி நிறுவனத்தைச் சேர்ந்த யாரையும் சந்திக்கவில்லை என சட்டப்பேரவையில் சொல்வீர்களா? அப்படிக் கூறினால் நாங்கள் அதனை நிரூபிக்கிறோம்.

திசைதிருப்பும் செயலை முதல்வர் கைவிட வேண்டும். அதானியை சந்திக்கவில்லை என மடைமாற்றம் செய்யும் முயற்சியை முதல்வர் கைவிட வேண்டும்.

சட்டப்பேரவையில் பேசியதற்கு நாளை முதல்வர் விளக்கமளிக்க வேண்டும். முதல்வர் சார்பாக மருமகனோ, அதிகாரிகளோ சந்திக்கவில்லை எனக் கூறட்டும், பின்னர் நாங்கள் அதனை நிரூபிக்கிறோம்

அதானிக்கு திமுக அரசு ஒப்பந்தம் கொடுத்துள்ளது. அப்படி இருக்கையில் அதானியையும் பாஜகவையும் இணைத்து, திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவது ஏன்?'' என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க | பக்தர்கள் மலையேற அனுமதி மறுப்பு ஏன்? - திருவண்ணாமலை ஆட்சியர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com