Annamalai questions the Chief Minister MK stalin for pm shri scheme fund
கோப்புப் படம்

நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி ஒதுக்க முடியும்? - முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதில்...
Published on

நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி ஒதுக்குவார்கள்? என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

தேர்தல் சீசன் வந்தால் மட்டுமே பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார் என்றும் தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் கல்வி நிதி எப்போது வரும்? என்றும் மேலும் பல திட்டங்கள் குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,

"திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதல்வரே,

சமக்ரஷிக்ஷா(Samagra Shiksha) திட்டத்தின் ஒரு அங்கமான பிஎம்ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்? தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களில் எந்த தொகுதியும் குறைக்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே தெரிவித்துவிட்டார். உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்குமா இல்லை?

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் இருக்கும்போது, ஆளுநர் உங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் நிர்வாகத் தோல்விக்கு ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள்?

100 நாள் வேலை திட்டத்தை 150 நாள்களாக உயர்த்துவோம் என்று நீங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடாமல் இருக்கிறீர்கள். மத்திய அரசு தற்போது அதனை 125 நாள்களாக உயர்த்தி இருக்கிறது. இனிமேலும் அத்திட்டத்தில் உங்கள் கட்சியினரால் ஊழல் செய்ய முடியாது என்ற இயலாமை, உங்களை இப்படி புலம்ப வைத்திருக்கிறது.

எய்ம்ஸ் கட்டுமானம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. வேங்கைவயலுக்குதான் நீங்கள் போகவில்லை. மதுரைக்குச் சென்று பார்த்திருக்கலாமே? உங்களை யார் தடுத்தார்கள்? நீங்கள் விரும்பவில்லை என்றாலும், இந்த வருடம் மதுரை எய்ம்ஸ், மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்போம் என்று நீங்கள் கொடுத்த வாக்குறுதி நினைவில் இருக்கா? குறைந்தபட்சம் ஒரு செங்கல்லாவது வைத்தீர்களா? இயற்கை பேரிடர்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துவிட்டது. 5000 கோடி ரூபாய் செலவு செய்தும், வருடந்தோறும் சென்னையை வெள்ளக்காடாக மாற்றுவதே உங்கள் சாதனை.

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வேண்டுமென்றே உங்கள் அரசு தவறான திட்ட அறிக்கையை வழங்கியது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? திருத்தம் செய்யப்பட்ட அறிக்கையை மீண்டும் சமர்ப்பிக்க எண்ணம் இருக்கிறதா இல்லையா? கீழடி ஆய்வறிக்கை, உலகளாவிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால், மேலும் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என்று கேட்கிறது மத்திய அரசு. அந்த ஆதாரங்களைக் கொடுக்க என்ன தயக்கம் உங்கள் அரசுக்கு?

நீட் தேர்வை தமிழக மக்கள் எதிர்க்கவில்லை. ஏழை, எளிய மாணவர்களுக்கு, நீட் ஒரு வரப்பிரசாதம் என்பதை, ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகளில் இணையும் எளிய பின்புலம் கொண்ட பெற்றோர்கள் கூறுவார்கள். மருத்துவக் கல்வி இடங்களை விற்று, இத்தனை ஆண்டு காலம் பல கோடி சம்பாதித்த திமுக கும்பலுக்கு மட்டுமே நீட் தேர்வு கசக்கிறது. ஒரு காலத்தில், தங்களுக்குப் பிடிக்காதவர்கள் குறித்து, பொதுக் கழிவறைகளில் கரித் துண்டால் எழுதி அற்ப சந்தோஷப்படும் மோசமான பழக்கத்தை, ஏஐ காலத்திலும் தொடராதீர்கள் முதல்வரே, இனியாவது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

BJP Leader Annamalai questions the Chief Minister MK stalin for pm shri scheme fund

Annamalai questions the Chief Minister MK stalin for pm shri scheme fund
விபி ஜி ராம் ஜி தீர்மானம் நிறைவேற்றம்! பிரதமரிடம் இபிஎஸ் வலியுறுத்த முதல்வர் கோரிக்கை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com