
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது வலுக்குறையும் என வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாலச்சந்திரன் கூறுகையில்,
நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுக்குறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.
எங்கெல்லாம் அதி கனமழை(ரெட் அலர்ட்)
இதன் காரணமாக இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் அதாவது ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும்,
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆழ்ந்த காற்றகற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுக்குறைந்தபின் மழை படிப்படியாகக் குறைந்து, மேற்கு திசையில் புயல் நகரக்கூடும்.
வடகிழக்குப் பருவமழை..
இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 16 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளது. பொதுவாக அக்.31 வடகிழக்குப் பருவமழை நிறைவடையும், ஆனால் இந்தாண்டு இயல்பைப் பொறுத்து ஜனவரி வரை மழை தொடர வாய்ப்புள்ளது.
புதிய காற்றழுத்தத் தாழ்வு..
டிசம்பர் 15-ல் அந்தமான் கடல்பகுதியில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
புயலைச் சரியாகக் கணித்தோம் ஆனால்..
ஃபென்ஜால் புயலின் திசையை சரியாகக் கணித்தோம் ஆனால் திறனில் மாற்றம் ஏற்பட்டது. காலநிலை மாற்றத்தினாலும், திசை மாற்றத்தினாலும் புயல் கடக்கும் திசை மாறுபடும். நகர்வு பாதையில் வேறுபடலாம். மேகக்கூட்டங்கள் சமச்சீர்வாக உருவாகாது.
உலகம் முழுவதும் வானிலை கணிப்பில் தவறு ஏற்படுகிறது. அட்லாண்டிக் கடல் பகுதியில் புயல் கரையைக் கடந்தபோது கணிப்புகள் தவறி இருக்கின்றன.
தொழில்நுட்பம் மட்டுமின்றி புயலைக் கணிக்கும் அறிவியல் அம்சமும் முழுமையாக வேண்டும் என்று அவர் கூறினார்.
தற்போதுள்ள நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தப் பிறகும், தமிழகத்தில் மழை தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.