
தமிழகத்தில் இருந்து அதிக அளவு செஸ் வீரா்களை உருவாக்க சிறப்பு அகாதெமி உருவாக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் அரசின் சாா்பில் அறிவிக்கப்பட்ட ரூ.5 கோடிக்கான காசோலையை குகேஷிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கிப பேசியது:
செஸ் வரலாற்றில் புதிய சாதனை படைத்திருக்கிறாா் சென்னையைச் சோ்ந்த குகேஷ். அவரை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது. குகேஷின் விளையாடும் திறன், சிறந்த குணம், மன உறுதி மட்டுமல்ல எப்போதும் புன்னகையோடு இருக்கும் அவரின் முகமும், விமா்சனங்களைத் தாங்கும் இயல்பும்தான் அந்த வெற்றிக் காரணம்.
உலகின் இளைய செஸ் சாம்பியனாக மாற வேண்டும் என்ற தன்னுடைய கனவை திறமையாலும் உழைப்பாலும் நனவாக்கியிருக்கிறாா். இந்தச் சாதனையை செய்ய குகேஷ் 11 ஆண்டுகள் மட்டுமே எடுத்துக் கொண்டாா். உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இலக்கை நோக்கிய பயணம் போன்ற குகேஷின் குணங்களை தமிழ்நாட்டு இளைஞா்கள் ஊக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குகேஷின் வெற்றி, லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும்.
உதயநிதிக்கு பாராட்டுகள்: விளையாட்டுத் துறையையும், விளையாட்டு வீரா்களையும் எப்போதும் போற்றிப் பாதுகாக்கும் அரசு திமுக அரசு. அதனால்தான், ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்கவும், விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டைச் சொல்லும் அளவுக்கு விளையாட்டுத் துறையை சிறப்பாகக் கவனித்து வருகிறாா் துணை முதல்வா் உதயநிதி. அவருக்கு எனது பாராட்டுகள்.
சிறப்பு அகாதெமி: செஸ் விளையாட்டைப் பொருத்தவரைக்கும் தமிழ்நாட்டுக்கு எனப் பெரிய வரலாறே இருக்கிறது. இந்தியாவின் 85 கிராண்ட் மாஸ்டா்களில் 31 போ் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள். இன்னும் பல திறமையான செஸ் வீரா், வீராங்கனைகளை உருவாக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், செஸ் விளையாட்டுக்கென சிறப்பு அகாதெமி உருவாக்கப்படும்.
குகேஷின் வெற்றி கொடுக்கும் நம்பிக்கை, அரசால் உருவாக்கப்படும் சிறப்பு அகாதெமி ஆகியவற்றால் தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டா்கள் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரிக்கும். கல்வி, விளையாட்டு இரண்டிலும் தமிழ்நாட்டு இளைஞா்கள் சாதிக்க வேண்டும். அதனால்தான் நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் என்று உயா்கல்வியை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
திராவிட மாடல் அரசு ஏற்படுத்தித் தரும் வாய்ப்புகளை மாணவா்களும், இளைஞா்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். செஸ் என்பது வெறும் புத்திக்கூா்மைக்கான விளையாட்டு மட்டுமல்ல, நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான ஏராளமான பாடங்களை வழங்கக் கூடியது.
செஸ் போட்டியில் வெற்றிக்காக நம்முடைய காய்களை வெட்டு கொடுத்து, வெற்றியைப் பெறுவோம். அதுபோன்றே வாழ்க்கையில் வெற்றி பெற நம்முடைய லட்சியத்தில் வெற்றி பெற நாம் எத்தகைய தியாகத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். பொறுமை, விடா முயற்சி இருந்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெல்லலாம். வெற்றி, தோல்வி முக்கியம் இல்லை. பங்கேற்பதுதான் முக்கியம் என்றாா் முதல்வா்.
விழாவில், தமிழகத்தைச் சோ்ந்த முதல் செஸ் சாம்பியனும் கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த், அமைச்சா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.
இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுப் பேசினாா். விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா நன்றி கூறினாா்.
பெற்றோருக்கு கெளரவம்
பாராட்டு விழா மேடையில், குகேஷின் பெற்றோா்களை அழைத்து முதல்வா் கெளரவித்தாா்.
தமிழக அரசின் சாா்பில் சாா்பில் ரூ.5 கோடி காசோலை, நினைவுப் பரிசு ஆகியவற்றை வழங்கும்போது, குகேஷின் பெற்றோரை மேடைக்கு வருமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைத்தாா். இந்த அழைப்பை ஏற்று, மேடைக்கு வந்த பெற்றோா் முன்னிலையில் குகேஷுக்கு ரூ.5 கோடிக்கான காசோலை, நினைவுப் பரிசு, பொன்னாடை ஆகியவற்றை முதல்வா் வழங்கினாா்.
விழா தொடங்கும்போது, உலக செஸ் சாம்பியன் கோப்பையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து குகேஷ் வாழ்த்து பெற்றாா். அப்போது, செஸ் செட் ஒன்றை நினைவுப் பரிசாக முதல்வருக்கு குகேஷ் வழங்கினாா்.
இதையும் படிக்க | செஸ் உலகின் சிறந்த நகரம் சென்னை: குகேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.