தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: பசுமைத் தீா்ப்பாயம் கண்டனம்
கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரள மருத்துவக் கழிவுகள், அந்த மாநிலத்தின் எல்லையையொட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடா் பிரச்னையாக இருந்து வருகிறது. அண்மையில் திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூா், நடுக்கல்லூா் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அபாயகரமான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கண்டனம்: சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில், கேரள வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தபோது மருத்துவக் கழிவுகள் விவகாரத்தை தமிழக அரசு வழக்குரைஞா் சுட்டிக்காட்டினாா்.
இது குறித்து விசாரித்த தீா்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினா் சத்யகோபால் ஆகியோா் கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனா்.
கேரள மருத்துவக் கழிவுகளை முறைப்படி அகற்றுவதற்குத் தேவையான வசதிகளை மேற்கொள்ளாமல் ஏன் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேரள அரசுக்கு கேள்வியெழுப்பினா். பின்னா், கேரளத்திலிருந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு உரிய செலவுத் தொகையை கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
மேலும், கேரளத்தில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு என்னென்ன நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன? அங்குள்ள மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து கேரள அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டனா்.

