
நமது சிறப்பு நிருபர்
பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' என்ற ஆய்வு நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் சாகித்திய அகாதெமியின் தலைவர் மாதவ் கௌஷிக் தலைமையில் நடைபெற்ற அகாதெமியின் கூட்ட முடிவில் 8 கவிதை நூல்கள், 3 நாவல்கள், 2 சிறுகதை நூல்கள், 3 கட்டுரை நூல்கள், 3 இலக்கிய விமர்சனங்கள், ஒரு நாடகம், ஓர் ஆய்வு நூல் என 21 மொழிகளின் படைப்புகள் 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய விருதுக்கு தேர்வாயின. இதுகுறித்த அறிவிப்பை அகாதெமியின் செயலர் டாக்டர் கே. ஸ்ரீனிவாசராவ் வெளியிட்டார்.
இதில், வரலாற்றுப் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய "திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908' என்ற தமிழ் நூலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1908-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி வ.உ.சி. கைதைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையின் தொடர்ச்சியாக ஏற்பட்ட எழுச்சி குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் இந்நூல் விரிவாக ஆராய்ந்துள்ளது.
விருதாளர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் ரொக்கம், செப்புப் பட்டயம், பொன்னாடை ஆகியவை தில்லி கோபர்நிகஸ் மார்கில் உள்ள கமானி அரங்கில் 2025, மார்ச் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் வழங்கப்படும்.
வழக்கமாக 24 மொழிகளில் சாகித்திய அகாதெமி விருதுக்குரிய படைப்புகளின் பெயர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். இம்முறை 21 மொழி படைப்புகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெங்காலி, டோக்ரி, உருது மொழிகளுக்கான படைப்புகளுக்குரிய விருதாளர்களின் பெயர் பிந்தைய தேதியில் அறிவிக்கப்படும் என்று சாகித்திய அகாதெமி தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் 1967-இல் பிறந்த ஆ.இரா.வேங்கடாசலபதி, தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆய்வறிஞர்களில் ஒருவர் ஆவார். தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 1850-1938 ஆண்டுகளின் தமிழ் புத்தக பதிப்பு, சமூக வரலாறு பற்றிய ஆய்வில் 1995-ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாறு முதுகலைப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளநிலை பட்டமும் பெற்றார்.
நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் விரிவுரையாளர், அதே பல்கலையின் இந்திய வரலாற்றுப் பிரிவில் விரிவுரையாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். சமூக வரலாறு, கலாசார வரலாறு, அறிவுசார் வரலாறு, இலக்கிய வரலாற்றியல், சமூக மற்றும் கலாசார மாற்றம் போன்றவை தொடர்பான ஆய்வுகளில் மிக ஆழமாக ஈடுபட்டு வருபவர் ஆ.இரா. வேங்கடாசலபதி.
"மகிழ்ச்சி அளிக்கிறது'
சென்னை, டிச. 18: வஉசி குறித்து எழுதிய நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ஆ.இரா.வேங்கடாசலபதி கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: வஉசி குறித்து எழுதிய நூலுக்காக விருது கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நான் வரலாற்று ஆய்வாளராக மாறியதற்கு வஉசிதான் காரணம். தொழிலாளர் இயக்கத்துக்கு வஉசி முன்னோடியாகத் திகழ்கிறார். இடஒதுக்கீட்டுக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார்.
சித்த மருத்துவத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். அவர் ஒரு பேராளுமை. வஉசி குறித்த பல தகவல்கள் ஆவணப்படுத்தப்படவில்லை. இந்நூலுக்கு ஆய்வறிஞர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் உதவினர். அவர்களுக்கு நன்றி. பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இது எனது சக்திக்கு மீறிய பணி என்றார் அவர்.
இதையும் படிக்க.. சென்னைக்கு இதுதான் கடைசி மழையா?
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, டிச. 18: சாகித்திய அகாதெமி விருதுக்கு தேர்வாகியுள்ள பேராசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக நரஅஈஉநஏஐ நபஉஅங எனும் நூலை ஆ.இரா.வேங்கடாசலபதி வெளிக் கொண்டு வந்தார். அதே தருணத்தில், அவரது "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' என்ற நூல் சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வாகியுள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. கலகம் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் எழுச்சி எனப் பதிவு செய்த வரலாற்று ஆய்வாளர் வேங்கடாசலபதிக்கு வாழ்த்துகள், பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.
தில்லி அமைப்புகள் வாழ்த்து: ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு தில்லி தமிழ் சங்கம், தில்லி கம்பன் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
"தினமணி' விருதாளர்
மகாகவி பாரதியார் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அரிய தகவல்களைத் திரட்டி வெளியிட்டு வரும் பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2022-ஆம் ஆண்டுக்கான தினமணியின் மகாகவி பாரதியார் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி காமராஜர் கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவில் இந்த விருதை ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு அப்போதைய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.