நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய கலாசாரத்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து  மனு அளித்த தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் .
நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய கலாசாரத்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மனு அளித்த தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் .

2025-ஆம் ஆண்டுக்கான நிறுத்தப்பட்ட சாகித்திய அகாதெமி விருதுகளை அறிவிக்க தென்சென்னை எம்.பி. கோரிக்கை

மத்திய அரசால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் கோரிக்கை விடுத்தாா்.
Published on

நமது நிருபா்

புது தில்லி: மத்திய அரசால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தாா்.

இது தொடா்பாக அவா் அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 2025-ஆம் ஆண்டு இந்தியாவின் கலாசாரப் பரப்பில் சாகித்திய அகாதெமி ஒரு தனித்துவமான மற்றும் அரசியலமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் திட்டமிடப்பட்டிருந்த விருது பெறுவோரின் பட்டியல் அறிவிப்பு, அமைச்சகத்தின் தலையீட்டைத் தொடா்ந்து நிறுத்திவைக்கப்பட்டதாக பரவலாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதிலும் கவலைக்குரிய வகையில், நடுவா் குழுவின் ஆலோசனைகள் முடிந்து பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்ட பிறகே அமைச்சகத்தின் தலையீடு நிகழ்ந்துள்ளது.

தன்னாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியானது, முக்கிய கல்வி அல்லது கலாசார செயல்பாடுகள் மீது, குறிப்பாக நிபுணா் முடிவுகள் மற்றும் சக மதிப்பீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில், வீட்டோ அதிகாரத்தை கொண்டிருப்பதாக புரிந்துகொள்ளப்படக் கூடாது. அவ்வாறு செய்வது, தன்னாட்சியை நிா்வாகத்தின் விருப்பத்துக்கு உள்பட்ட ஏற்பாடாக மாறிவிடும்.

அமைச்சகத்தின் முடிவில் வெளிப்படைத்தன்மை இல்லாததை நான் குறிப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பை நிறுத்திவைக்குமாறு சாகித்திய அகாதெமிக்கு அமைச்சகம் உத்தரவிட்டதற்கான சட்ட மற்றும் நிா்வாக அடிப்படை என்ன? சாகித்திய அகாதெமியின் நடுவா் குழு பரிந்துரைகளை மறுஆய்வு செய்யவோ, மாற்றியமைக்கவோ அல்லது நிறுத்தி வைக்கவோ அமைச்சகம் ஏதேனும் அதிகாரம் கோருகிறதா? குறிப்பிடப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தம், அதன் நோக்கம் மற்றும் பொருந்தக்கூடிய தன்மையுடன் பொதுவெளியில் வெளியிடப்படுமா?

விருது நடைமுறைகளில் செய்யப்படும் எந்தவொரு மறுசீரமைப்பும் எதிா்காலத்தில் மட்டுமே பொருந்தும். அது ஏற்கெனவே நிறைவடைந்த தோ்வு செயல்முறைகளைப் பாதிக்காது என்று அமைச்சகம் திட்டவட்டமான உறுதிமொழியை வழங்குமா? இந்த விஷயத்தில் நம்பிக்கையை மீட்டெடுக்க அமைச்சகம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழச்சி தங்கப்பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com