சாகித்திய அகாதெமிக்கு நிகராக "செம்மொழி இலக்கிய விருது'-தமிழக முதல்வரின் அறிவிப்பு குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Published on

பாராட்டலாம்

தமிழக முதல்வரின் இந்தச் செயல் தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம். சாகித்திய அகாதெமி விருதுக்கு நிகராக "செம்மொழி இலக்கிய விருதை' அறிவித்திருப்பது தமிழ் மொழிக்கும், தமிழகத்துக்கும் முதல்வருக்கும் புகழைச் சேர்க்கும். முதல்வரின் இந்தச் செயலைப் பாராட்டலாம். இனி செம்மொழி இலக்கிய விருது பெறுபவர்கள் தாங்கள் சாகித்திய அகாதெமி விருது பெற்றதாகவே நினைத்து மகிழ்ந்து மேலும் பல விருதுகளைப் பெற முயற்சி செய்வர்.

பிரகதாம்பாள், கடலூர்.

மத்திய அரசுக்கு நிகராக...

தான் வசிக்கும் நாட்டை நேசிப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல, தான் பேசும் மொழியை நேசிப்பதும் ஆகும். அறிஞர்கள், எழுத்தாளர்களுக்கான அங்கீகாரம் என்பது அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி கெüரவிப்பதில்தான் உள்ளது. மத்திய அரசு சாகித்திய அகாதெமி விருது கொடுப்பதுபோல, மாநில அரசும் "செம்மொழி இலக்கிய விருது' வழங்கி கெüரவிக்க எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத் தக்கது.

மவ்லவீ எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ,

விழுப்புரம்.

தேர்வுக் குழுவில் கவனம்

மு.க. ஸ்டாலின் முதல்வரான பிறகு தமிழக அரசு புத்தகங்களின் வளர்ச்சிக்கும், அதன் விற்பனைக்கும் மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது. எழுத்தாளர்களையும் கெளரவித்து வருகிறது. அந்த வகையில் "செம்மொழி இலக்கிய விருது' தொடர்பான அறிவிப்பு, தேசிய அளவில் நூல்களுக்கு முக்கியத்துவம் அளித்து, பிற மாநிலங்கள் தமிழ்நாட்டை முன்னுதாரணமாகக் கொள்ள வழிவகுக்கும். விருது வழங்குவதற்கான தேர்வுக் குழுவை மிகுந்த கவனத்துடன் அமைக்க வேண்டும்.

இரா.செல்வமணி, திருநெல்வேலி.

மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம்

மத்திய அரசின் சாகித்திய அகாதமி விருது எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு தேசிய அங்கீகாரத்தை வழங்குவதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுடன்கூடிய ஒரு பட்டயத்தையும் கொடுக்கும். தற்போது "செம்மொழி இலக்கிய விருது' சாகித்திய அகாதெமி விருதைப் போன்றே தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு தேசிய அங்கீகாரம், ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசுடன்கூடிய மதிப்புமிக்கதாக இருக்கும். இதில் மொழிபெயர்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், தேசிய அளவில் உள்ள பிறமொழி வாசகர்களுக்கும் சென்றடைய வாய்ப்பு.

கே.ஆர்.ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

மொழியைக் காப்பாற்ற...

மிகவும் பழைமையான மொழி என்றால் அது நம் தாய்மொழியான தமிழ்தான். இதை உணர்ந்ததால்தான் பலரும் தமிழகத்துக்கு வரும்போது, பொதுக்கூட்டங்களில் தமிழ்மொழியில் பேசி, தமிழர்களின் மனதைக் கவர முயற்சிக்கிறார்கள். மேன்மையான தமிழ்மொழி நலிவடைந்து விடக்கூடாது என்ற நோக்கில் "செம்மொழி இலக்கிய விருதை' சாகித்திய அகாதெமி விருதுக்கு நிகராக முதல்வர் அறிவித்தது பெருமைப்பட வேண்டிய விஷயம். இந்த விருதைப் பெறுவோர் நிச்சயம் மிகப் பெருமையாக உணர்வர். அனைவரும் மகிழும் வகையிலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு பாராட்டுகள்.

நந்தினி கிருஷ்ணன், மும்பை.

அரசியல் தலையீடு கூடாது

சங்க காலம் தொடங்கி தற்போதுவரை செழித்து வளர்ந்துள்ள தமிழ் இலக்கியத்துக்கு உயரிய அங்கீகாரம் தேவையானதே. ஆனால், விருது அறிவிப்பைவிட அதன் தேர்வு முறை, சுயாதீனம், நம்பகத்தன்மை ஆகியவை முக்கியம். அரசியல் தலையீடுகள் இல்லாமல், தகுதியான இலக்கிய ஆளுமைகள் அடங்கிய குழுவால் விருது வழங்கப்பட வேண்டும். மொழி, சிந்தனை, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும்போது மட்டுமே, இந்த "செம்மொழி இலக்கிய விருது' தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சிறப்பு முயற்சியாக அமையும்.

ரமேஷ்.ஆர்., சேலம்.

மொழிகளுக்கிடையே ஒற்றுமை

இந்திய மொழிகளில் படைப்பிலக்கியத்தில் சிற்பிகளாக திகழ்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுடைய சிறந்த இலக்கிய படைப்புக்கு விருதளித்து கெüரவிப்பதை தொடர்ந்து பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த சாகித்திய அகாதெமிக்கு நிகராக, தமிழக முதல்வர் "செம்மொழி இலக்கிய விருதை' படைப்பிலக்கியவாதிகளுக்கு வழங்க முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. தமிழ் மொழியுடன் இணைந்து பிறமொழி படைப்பிலக்கியங்களுக்கும் இந்த விருது வழங்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை மொழிகளுக்கிடையே ஒற்றுமையும் ஒருமைப்பாடும் வளர வேண்டும் என்ற உயரிய பண்பின் வெளிப்பாடு என்றுதான் கருத வேண்டும்.

ரஃபீக்.ஐ., திருச்சி.

விசாலமான பார்வை

பண்பாடு, கலாசாரம் போன்றவை ஒவ்வொரு நாளும் மாறி வரும் இந்நாளில், அனைத்துத் தரப்பு மக்களும் நுகர்ந்து மகிழும் வகையில் இந்திய மொழிகளில் வெளியாகும் ஒவ்வொரு சிறந்த இலக்கியப் படைப்புக்கும் சாகித்திய அகாதெமிக்கு நிகரான விருது வழங்கப்படும் என்கிற முதல்வரின் விசாலமான பார்வை கொண்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கது. சிறந்த இலக்கியப் படைப்பாளிகள், அவர்கள் எந்த மொழியைச் சார்ந்திருப்பினும் சிறப்பிக்கப்பட வேண்டும் என்கிற முதல்வரின் நோக்கம் உயரியது. சிறந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கு உரிய கெüரவம் அளிக்க வேண்டியது அரசின் கடமை.

கே.ராமநாதன், மதுரை.

கலைஞர்களுக்கு ஊக்கம்

கலை, இலக்கியம் போன்றவற்றில் மத்திய அரசின் தலையீடு என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்பது வரவேற்கத்தக்க ஒன்று. இலக்கியத்தின் சுதந்திரம் மொழிகளுக்கு இடையேயான பாலத்தைப் பலப்படுத்த தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராத்தி மொழிகளில் வெளிவந்த நூல்களைத் தேடி ஆராய்ந்து "செம்மொழி இலக்கிய விருது' வழங்குவதை வரவேற்க வேண்டும். எல்லைகளைக் கடந்தது இலக்கியம் என்பதை உணர்த்தவும், கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கவும் இந்த விருது உதவும் என முதல்வர் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. அரசியல் கலப்பில்லாத விருது ஏற்கக்கூடியதே...

ப.தாணப்பன், தச்சநல்லூர்.

மகிழ்ச்சியான செய்தி

சாகித்திய அகாதெமிக்கு நிகராக செம்மொழி இலக்கிய விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். தமிழ்மொழி மிகவும் பழைமையானது; தொன்மையானது. இது தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம். சாகித்திய அகாதெமி விருதுக்கு இணையாக "செம்மொழி இலக்கிய விருது' கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருதைப் பெறுவதற்கு பலரும் முயற்சி செய்வர். தமிழ்மொழியை வளர்க்கும் முதல்வரின் முயற்சியாகவே இதைக் கருத வேண்டும்.

உஷா முத்துராமன், மதுரை.

நிகராகவா? எதிராகவா?

மத்திய அரசின் செயல்பாடுகள், அறிவிப்புகளுக்கு எதிர்வினையாற்றும் நிலைப்பாட்டை தமிழக முதல்வர் கடைப்பிடித்து வருகிறார். மாநில கல்விக் கொள்கை, நவோதயா பள்ளிகள் தடை, பத்தாவது வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி, சாகித்திய அகாதெமி விருது போன்றே "செம்மொழி இலக்கிய விருது' என பல்வேறு அறிவிப்புகளும், செயல்பாடுகளுக்கும் தமிழக நலனுக்கு உகந்ததல்ல.செம்மொழி இலக்கிய விருது சாகித்திய அகாதெமி விருதுக்கு நிகராகவா? எதிராகவா? என்பதில் ஐயம் உள்ளது.

வீ.வேணுகுமார். கண்ணமங்கலம்.

தலையீடு கூடாது

நாட்டின் அனைத்து மொழி இலக்கியங்களும் சாகித்திய அகாதெமி விருதுக்கு இணையான விருதை தமிழக அரசு வழங்கும் என அறிவித்திருக்கிறார். அந்த விருதுக்கு ரூ.5 லட்சம் பரிசு என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆட்சிகள் மாறும் போது ஆட்சியாளர்களின் புகழ்பாடும் நபர்களுக்கு விருது வழங்காமல் இருப்பது நல்லது. எந்த ஓர் அமைப்பிலும் அரசியல் தலையீடு இருந்தால், அதன் நோக்கமும் சிறப்பும் குன்றிவிடும். எனவே, இது விஷயத்தில் கவனமாக இருத்தல் அவசியம்.

தி சேகர், பீர்க்கன்கரணை.

ஒரே நேர்கோட்டில்...

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகும் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் விருதுடன் ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு சிறப்பானது. தனி மனிதர் ஒரு நூலை படித்து உணரும் சிந்தனையை அடிப்படையாக வைத்தே சம்பந்தப்பட்ட படைப்பை சிறந்ததாகக் கூற முடியும். ஓர் எழுத்துப் படைப்பு நிலைத்து நிற்பதற்கு எழுத்தாளர், பதிப்பாளர், வாசகர்கள் ஆகியோர் ஒரே நேர்கோட்டில் இருப்பது அவசியம். கலை, இலக்கிய விருதுகள் வழங்குவதில்கூட அரசியல் குறிக்கீடுகள் இருப்பது அபாயமானது.

என்.வி.சீனிவாசன், புது பெருங்களத்தூர்.

கோரிக்கை ஏற்பு

சென்ற ஆண்டு சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட இருந்த நிலையில், மத்திய அரசின் கலாசாரத் துறை தலையிட்டால் அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது என்பது ஏற்புடையதல்ல. கலை, இலக்கிய விருதுகளில்கூட அரசியல் குறுக்கீடு தவறானது. எழுத்தாளர்களும் கலை, இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தமிழக முதல்வரிடம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, முதல்கட்டமாக புகழ்பெற்ற எழுத்தாளர்களைக் கொண்ட குழு அமைத்து, தமிழ் உள்பட ஏழு மொழிகளில் தேர்வு செய்யும் படைப்புகளுக்கு "செம்மொழி இலக்கிய விருது' அறிவித்திருப்பது துணிச்சலானது.

க.அருச்சுனன்,செங்கல்பட்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com