பேனா முனை உடைக்கப்பட்டதா? பரங்கிமலை கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தது யார்?

பரங்கிமலை கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தது சத்தியபிரியாவின் தோழி.
பரங்கிமலை ரயில் நிலையம்
பரங்கிமலை ரயில் நிலையம்
Published on
Updated on
2 min read

சென்னை: சென்னையை அடுத்த பரங்கிமலையில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் இளைஞா் சதீஷுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில், மாணவியின் தோழி நேரடி சாட்சியமாக இருந்து குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க பேருதவி செய்த தகவல் வெளியாகியிருக்கிறது.

2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சத்தியபிரியாவின் கொலை நடந்த அடுத்த நாள் அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். சம்பவத்தின் போது புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த சத்தியபிரியாவின் தாயும் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உயிரிழந்தார். இதனால், தாய், தந்தையை இழந்து சத்தியபிரியாவின் இரண்டு சகோதரிகள் நிராதரவாக தனது உறவினரின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார்கள்.

இனால், அவருடைய இரண்டு சகோதரிகளுக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் சகோதரிகளுக்கு ரூ.10 லட்சத்தை தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருக்கிறது.

சென்னையை அடுத்த ஆலந்தூா் காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மாணிக்கம். சொந்தமாக காா் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தாா். இவரது மனைவி ராமலட்சுமி, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார்.

இவர்களது மூத்த மகள் சத்தியபிரியா (20), தியாகராய நகரில் உள்ள தனியாா் கல்லூரியில் பிசிஏ 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா் தயாளனின் மகன் சதீஷ் (31) என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

பெற்றோா் கண்டித்ததால், சதீஷுடனான காதலை சத்தியபிரியா கைவிட்டாா். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022-ஆம் ஆண்டு அக். 13-ஆம் தேதி கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்தியபிரியாவை, ரயில் முன் தள்ளிப் படுகொலை செய்தாா்.

இதுதொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி சதீஷை கைது செய்தனா். அவா் மீது நீதிமன்றத்தில் வெறும் 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றவாளி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதம் ஆனதால் ஜாமீனில் வெளியே வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது சிபிசிஐடி காவல்துறை.

இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதேவி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

காவல் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் ரவீந்திரநாத் ஜெயபால் ஆஜராகி, சதீஷ் மீதான குற்றச்சாட்டு கடுமையானது. அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதாடினாா். அரசுத் தரப்பு சாட்சிகள் 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகள் முன்வைக்கப்பட்டன. தடயவியல் ஆய்வுகளும் குற்றவாளிக்கு எதிரான ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த வழக்கில் சத்தியாவின் தோழி மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர்தான் முக்கிய சாட்சியமாக இருந்துள்ளார். சதீஷ் துன்புறுத்தல் குறித்து சம்பவத்துக்கு மூன்று நாள்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மற்றும் சம்பவத்தின்போது நடந்தது குறித்தும் அவர் விவரமாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

விசாரணையின்போது, இது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து என்று குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்குரைஞர் வழக்கை திசைதிருப்ப முயன்றார்.

மீனா குறுக்கு விசாரணையின்போது கேட்கப்பட்ட கேள்விகளால் அதிர்ச்சிக்குள்ளாகி, நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்த நிலையிலும், அவரது பெற்றோர் கொடுத்த ஊக்கத்தினால், வழக்கு விசாரணை முழுமைக்கும் அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்து நேரடி சாட்சியமாக இருந்து விசாரணைக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், மாணவியை ரயில் முன் தள்ளும் விடியோ, குற்றவாளி வீட்டிலிருந்து கிளம்பும்போது எடுத்த சிசிடிவி காட்சி, ரயில் நிலையத்துக்குள் நுழையும் சிசிடிவி காட்சிகளை பொருத்தி அவர்தான் குற்றவாளி என்பதை உறுதி செய்தது, ரயில் நிலையத்தில், மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டபோது, அவர் மீது மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க அவர் செல்போனில் பேசியபடி செல்வது போல ரயில் நிலையத்திலிருந்து சென்ற காட்சிகளை அவருக்கு எதிரான சாட்சியமாக்கியருக்கிறார்கள். அதாவது அந்த நேரத்தில் அவர் செல்போனில் பேசவில்லை என்பதை தொலைத்தொடர்பு நிறுவன தகவல் மூலம் சிபிசிஐடி காவல்துறை உறுதி செய்திருக்கிறது. அனைத்து ஆதாரங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சதீஷ் குற்றவாளி என தீர்ப்பளித்தது.

மேலும், இந்த வழக்கில் சதீஷுக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்களை நீதிபதி ஸ்ரீதேவி திங்கள்கிழமை அறிவித்தாா். அதில், சதீஷ் மீதான குற்றத்தை அரசுத் தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. இதுபோன்ற கடுமையான குற்றங்களைச் செய்தவா்கள் மீது இரக்கம் காட்ட முடியாது. குற்றவாளி சதீஷுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றவாளியை சாகும் வரை தூக்கிலிட வேண்டும்.

மேலும், அவருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்.

பொதுவாக மரண தண்டனை விதிக்கப்படும்போது, அடுத்து இதுபோன்ற தீர்ப்பை வழங்கக் கூடாது என்று தீர்ப்பை எழுதிய பேனா முனை உடைக்கப்படுவது வழக்கம். இந்த வழக்கிலும் அதுபோன்று உடைக்கப்பட்டதா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com