புதிய ரயில் முனையத்துக்கு வில்லிவாக்கம் தேர்வானது எப்படி?

சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களை இயக்க வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்திருந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களை இயக்க வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னையில் இருந்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. தற்போது சென்னையில் இருந்து அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ரயில்கள் வந்து செல்வதில் கூடுதல் நேரம் ஆகிறது. இதற்கு தீா்வு காணும் வகையிலும், புதிய ரயில்களை இயக்கும் வகையிலும் வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, தொண்டையார்பேட்டை அல்லது சால்ட் கொட்டாய் பகுதிகளில் அமைவதாகவே இருந்தது. சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, நான்காவது முனையம் உருவாக்கப்பட வேண்டும் என்ற திட்டம் 2014ஆம் ஆண்டு தொடங்கியது.

ஆனால், போதுமான நிலம் கிடைக்காததாலும், வெளி மாநிலங்களுக்கு ரயில்களில் இயக்குவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களாலும் இந்த திட்டம் கிடப்பிலேயே இருந்தது. முதலில், ராயபுரத்தை புதிய முனையமாக மாற்ற திட்டமிடப்பட்டு, போதுமான நிலம் இல்லாமல், ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சொந்தமான நிலத்தை ரயில்வேக்கு பெயர் மாற்றம் செய்வதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்களால் 2017ஆம் ஆண்டு அந்த திட்டமும் கைவிடப்பட்டது.

பிறகு தொண்டையார்பேட்டையில் புதிய முனையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. அதேவேளையில், சால்ட் கொட்டாயில் இருந்த காலி நிலமும் கவனத்தில் கொள்ளப்பட்டது. ஆனால், இயக்குவதில் ஏற்பட்ட சிக்கல்களால் அதுவும் கைவிடப்பட்டது.

ஆனால், இதுவரை ஒருங்கிணைந்த சாத்தியக்கூறு அறிக்கை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனால், நான்காவதாக புதிய முனையத்தை வில்லிவாக்கத்தில் அமைப்பதற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர், இதற்கான திட்ட மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தவுடன் விரைவில் புதிய முனையம் அமைக்கப்படும். சென்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எதிா்வரும் மாா்ச் மாதத்துக்குள் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை - மைசூரு இடையே அதிவேக ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை புறநகா் பகுதியில் இயக்கப்படும் மின்சார ரயில்களுக்கு மாற்றாக ‘வந்தே மெட்ரோ’ இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை கடற்கரை - எழும்பூா் 4-ஆவது வழித்தடம் அமைக்கும் பணி ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு ரூ. 20 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் தண்டவாளம், நடைமேடை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. புதிய ரயில் நிலையம் அமைக்க தண்டவாளம் மாற்றியமைக்க வேண்டியுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 6 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com