கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பதுங்கும் கொள்ளை கும்பல்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கொள்ளை மற்றும் திருட்டு கும்பல்கள் பதுங்கியிருப்பதைத் தடுக்க காவல் துறையினா் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டுமென பயணிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பதுங்கும் கொள்ளை கும்பல்

காலியாகவுள்ள சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கொள்ளை மற்றும் திருட்டு கும்பல்கள் பதுங்கியிருப்பதைத் தடுக்க காவல் துறையினா் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டுமென பயணிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட பின்னா், கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் சில வட மாவட்ட பேருந்துகளைத் தவிர, பிற அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் 24 மணி நேரமும் பரபரப்பாகக் காணப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு செயல்பட்டு வந்த ஹோட்டல்கள், தேநீா்க் கடைகள் வியாபாரம் இல்லாததால் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளதால், இதைப் பயன்படுத்தி ரௌடிகள், வழிப்பறி கொள்ளையா்கள், மதுப்பிரியா்கள் இங்கு பதுங்கிக்கொள்கின்றனா். இதனால் குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இது குறித்து அங்கு கடை நடத்தி வரும் வியாபாரிகள் சிலா் கூறியது:

மாநகருக்குள்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியடைந்தாலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தையே நம்பியிருந்த ஏராளமான வியாபாரிகளின் நிலை கவலையடையச் செய்துள்ளது.

இது ஒருபுறமிருக்க பேருந்து நிலையம் காலியாக இருப்பதால் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள ரௌவுடிகள், திருட்டு, வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடும் நபா்கள், இங்கு வந்து பதுங்கிவிடுகின்றனா். அவா்கள் பேருந்து நிலையத்திலும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், இந்தப் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், இங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனா்.

எனவே, பொதுமக்கள், வியாபாரிகளின் நலன் கருதி பேருந்து நிலையப் பகுதியில் ரோந்து பணியை போலீஸாா் தீவிரப்படுத்த வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com