ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2-ல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களின் உற்பத்தியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் இன்று (பிப். 8) தொடக்கி வைத்தார்.
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2-ல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களின் உற்பத்தியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், இ.ஆ.ப., அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தில் இன்று (பிப். 8) தொடக்கி வைத்தார்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் இயக்குவதற்கான 36 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களின் உற்பத்தியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், இ.ஆ.ப., இன்று 08.02.2024 அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம், ஸ்ரீசிட்டியில் தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (மெட்ரோ ரயில்), அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனில்குமார் சைனி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஒட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1215.92 கோடி மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடு பொறுப்பு போன்றவை உள்ளடங்கும். ஒப்பந்தம் வழங்கப்பட்ட பிறகு, வடிவமைப்பு ஆய்வுகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன. இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகளை உற்பத்தி செய்யும் பணியை உற்பத்தியாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம், ஸ்ரீசிட்டியில் இன்று 08.02.2024 தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் முதல் மெட்ரோ ரயில் ஆகஸ்ட் 2024-இல் பூந்தமல்லி பணிமனையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். மெட்ரோ ரயில் பெட்டிகளின் உற்பத்தியை முடித்த பிறகு, அல்ஸ்டோம் நிறுவனம் பொருத்துதல் மற்றும் மெட்ரோ ரயில் பெட்டிகளை இணைத்தல் ஆகியவற்றைத் தொடரும்.

அதன்பிறகு, முதல் மெட்ரோ ரயில் தொடர் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பூந்தமல்லி பணிமனையில் வழங்கப்படுவதற்கு முன்பு உற்பத்தியாளர் வளாகத்தில் தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். மெட்ரோ ரயில் தொடர் விநியோகத்தைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டில் பயணிகளின் சேவையை தொடங்குவதற்கான சட்டப்பூர்வ ஒப்புதல்களைப் பெறுவதுடன், மெட்ரோ ரயில் கட்டம்-2 வழித்தடத்தில் பல்வேறு நிலையில் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் இயக்கப்படும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் பயணிகளின் வசதி, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு அம்சங்களை வழங்குவதன் மூலம் நகர்ப்புற போக்குவரத்தை மறுவரையறை செய்கிறது. 1000 பயணிகள் வரை பயணிக்கும் திறன் கொண்ட மூன்று பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரயில்கள் உட்புறத்தில் விசாலமான இடங்களை வழங்குவதன் மூலம் தடையற்ற உள்நகர்வுக்கான அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றன.

குளிரூட்டப்பட்ட சூழல், பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்யேக இடங்களுடன் சிறந்த வசதியை வழங்குவதோடு பெண்களுக்கு ஏற்ற பயண அனுபவத்தையும் வழங்கும். அவசரகால வெளியேற்ற கதவுகள், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் தடைகளை கண்டறியும் கருவிகள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் பாதுகாப்பை மேம்படுத்துகின்றன.

ரயில்களில் ஆற்றல் திறனுக்காக மீளுருவாக்கம் செய்யக்கூடிய பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மேம்பட்ட பயணிகள் அறிவிப்பு அமைப்புகள் சரியான நேரத்தில் புதுப்பிப்புகளை வழங்குகின்றன. ஒட்டுமொத்தமாக, இந்த ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் நகர்ப்புற போக்குவரத்தில் ஒரு புதிய தரநிலையை அமைத்து, வசதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை இணைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com