காவலரை கார் ஏற்றிக் கொன்ற வழக்கு: நீதிமன்றத்தில் சரணடைந்த குற்றவாளி!

செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்.
காவலரை கார் ஏற்றிக் கொன்ற வழக்கு: நீதிமன்றத்தில் சரணடைந்த குற்றவாளி!

விழுப்புரம் : ஆந்திர மாநிலம், குண்டரவாரிப்பள்ளி சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.

ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் அன்னமயா மாவட்டம், குண்டரவாரிப்பள்ளி அருகில் பிப்ரவரி 6 - ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை போலீஸார் நிறுத்த முயன்ற போது, கார் நிற்காமல் சென்றது. மேலும் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் கணேசன் (32) மீது காரை ஏற்றி அந்த கும்பல் தப்பிச் சென்றது.

இது தொடர்பாக செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, 8 பேரைத் தேடி வந்தனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அப்பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் முகாமிட்டனர்.

இதைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தைச் அருண்குமார், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அஜித் ஆகியோரை போலீஸார் கைது செய்து, மற்றவர்களைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை இன்னாடு ஊராட்சி, கீழ் நிலவூரைச் சேர்ந்த சின்னையன் மகன் ராமன் (31) விழுப்புரம் நீதித்துறை நடுவர் மன்றம் எண் - 2 - இல் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார். இதையடுத்து அவரை வேடம்பட்டு சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் அகிலா உத்தரவிட்டார்.

மேலும், வழக்கில் தொடர்புடைய கல்வராயன் மலையைச் சேர்ந்த மகேந்திரன், இளையராஜா, கஜேந்திரன், ராஜ்குமார், குமார் ஆகிய 5 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com