ஆதிதிராவிடர் - பழங்குடியினருக்கு 120 சமூகக் கூடங்கள் அமைக்கப்படும்!

பழங்குடியினர் வாழ்விடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், தொல்குடி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
ஆதிதிராவிடர் - பழங்குடியினருக்கு 120 சமூகக் கூடங்கள் அமைக்கப்படும்!

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். நிதியமைச்சராகத் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

அவரது உரையில்,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்த தொழில் முனைவோர்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தில் மூலம் 755 நபர்கள் ரூ.84 கோடி மானியத்துடன் கூடிய ரூ.156 கோடி கடன் வசதி பெற்றுப் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பினைக் கருதி, திருத்த மதிப்பீடுகளில் கூடுதலாக ரூ.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் 2024-25 ஆண்டிற்கான வரசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். CM Arise என்ற புதிய திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு 35 சதவீத வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில்முனைவோர் கடன் பெறலாம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வரும் ஆண்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும்.

நகர்ப்புற பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும், ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் முழுமையான சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.230 கோடி நிதி ஒதுக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் வகையில் திருமணக் கூடும், உள்விளையாட்டுக் கூடும், கற்றல் மற்றும் பயிற்சி மையம் போன்ற வசதிகள் கொண்ட 120 சமூகக் கூடங்கள் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

பழங்குடியினர் வாழ்விடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், தொல்குடி என்ற புதிய திட்டம் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com