ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.20 லட்சம் கடன்: அன்புமணி ராமதாஸ்

ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.20 லட்சம் கடன் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

"தமிழ்நாடு மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொள்வதை நோக்கி பயணிப்பதை 2024&25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை உறுதி செய்திருக்கிறது. 2024-25ஆம் ஆண்டின் நிறைவில் தமிழ்நாடு அரசின் நேரடிக் கடன் மட்டும் ரூ.8,33,361 கோடியாக அதிகரிக்கும் என்பதும், ஓராண்டிற்கான வட்டியாக ரூ.63,722 கோடியாக செலுத்த வேண்டும் என்பதும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடிப்படையான தேவைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து இணைப்பு வசதிகள் செய்யப்படாத நிலையில், விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழக அரசோ, 3 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி கடந்து சென்றிருக்கிறது. இத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பதைக் கூட அரசு அறிவிக்கவில்லை.

மேகதாது அணை கட்டப்படும் என்பதை கர்நாடக அரசும், புதிய முல்லைப்பெரியாறு அணை கட்டப்படும் என்பதை கேரள அரசும் அம்மாநில நிதிநிலை அறிக்கைகளின் ஓர் அங்கமாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், மேகதாது, முல்லைப்பெரியாறு விவகாரங்களில் தமிழகத்தின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கூட நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அளிக்காதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

மற்றொருபுறம், தமிழகத்தின் பொருளாதார நிலை சீரழிந்து கொண்டே செல்கிறது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தென்படுகின்றன.

* 2023-24ஆம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் ரூ.1.81 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் அது ரூ.1.70 லட்சம் கோடியாக குறைந்து விட்டது.

* 2023-24ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.37,540 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 2024-25ஆம் ஆண்டில் இது ரூ.18,588 கோடியாக குறைந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது இது ரூ.49,278 கோடியாக அதிகரித்திருக்கிறது.

* 2023-24ஆம் ஆண்டில் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை ரூ.89,884 கோடியாக கணிக்கப்பட்டிருந்த நிலையில், இது இப்போது ரூ.94,059 கோடியாக அதிகரித்திருக்கிறது. 2024-25ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.96,031 கோடியாக கணிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அது ரூ.1,08,689 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்து வருவதையே இது காட்டுகிறது.

* 2024-25 ஆம் ஆண்டில் தமிழக அரசு ரூ.49,638 கோடி கடனை அடைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கான நிதி தமிழக அரசிடம் இல்லாத நிலையில், ரூ.1,55,584 கோடி கடன் வாங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

* 2024-25ஆம் ஆண்டின் நிறைவில் தமிழக அரசின் நேரடிக் கடன் மட்டும் ரூ.8,33,361.80 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் கடன் அளவான ரூ.7,26,028 கோடியை விட ரூ.1,07,333 கோடி அதிகமாகும். அதாவது நடப்பாண்டில் தமிழக அரசு ரூ.1,07,333 கோடி நிகரக் கடன் வாங்கியுள்ளது.

* தமிழ்நாட்டில் 2021-22 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ.4,56,660.99 கோடியாக இருந்தது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2024-25ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ.3,76,700.81 கோடி கடன் வாங்கியிருக்கிறது.

* அதாவது இந்தியா விடுதலை அடைந்தது முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் தமிழ்நாட்டை ஆட்சி செய்த அரசுகள் வாங்கிய கடனில் 82.50% கடனை தற்போதைய திமுக அரசு மட்டும் வாங்கிக் குவித்திருக்கிறது.

* தமிழக அரசின் நேரடிக் கடனை, தமிழ்நாட்டின் மக்கள்தொகையான 7.65 கோடியுடன் பகிர்ந்தால் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.20 லட்சம் கடனாக வாங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் மொத்தம் 5 பேர் இருப்பதாகக் கொண்டால் அக்குடும்பத்தின் மீது ரூ.6 லட்சம் கடனாக வாங்கப்பட்டிருக்கிறது.

* தமிழக அரசு இதுவரை வாங்கிக் குவித்துள்ள கடனுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.63,722 கோடி வட்டி செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் ரூ.175 கோடி வட்டி செலுத்த வேண்டியுள்ளது. இரு நாள்கள் செலுத்த வேண்டிய வட்டியை சேமித்தால் ஒரு மருத்துவக் கல்லூரியை கட்டிவிட முடியும்.

* 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.எஸ்.டி.பி) ரூ.32 லட்சத்து 928 கோடியாக இருக்கும் என்று ஏற்கனவே மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ரூ.31.55 லட்சம் கோடியாக குறைந்து விட்டது. தமிழக பொருளாதார வீழ்ச்சியை இது காட்டுகிறது.

தமிழ்நாட்டின் பொருளாதாரம் அனைத்து வழிகளிலும் வீழ்ச்சியடைந்து வருவதையே தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை காட்டுகிறது. புதிய கொள்கைகளின் மூலம் தமிழகத்தின் உற்பத்தியை அதிகரித்தல், வரியில்லாத வருமானத்தை அதிகரித்தல், செலவுகளைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டு, முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com