ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் மனு தள்ளுபடி: போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை

ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் மனு தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் மனு தள்ளுபடி: போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை

சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்துமுனையம் ஆகிய மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த இடைக்கால உத்தரவினை எதிர்த்தும் அதனடிப்படையில் போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட அறிவுறுத்தலை எதிர்த்தும், கடந்த 22.01.2024 அன்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரண்டு ஆணைகளை எதிர்த்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன்மூலம் கடந்த 22.01.2024 அன்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரு உத்தரவுகளும், சென்னை உயர்நீதிமன்றத்தின் 09.02.2024 தேதியிட்ட இடைக்கால உத்தரவும் மற்றும் போக்குவரத்து ஆணையரால் 13.02.2024 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கைச்செய்தியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் உறுதி படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் கீழ்க்கண்ட 3 இடங்களை தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என அறிவிக்கப்படுகிறது:

சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி, சென்னை புறவழிச்சாலையில் சூரப்பட்டு சுங்கச்சாவடி, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் என மேற்கண்ட 3 இடங்களை தவிர தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதி இல்லை என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை மீறி மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களில் தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவது கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையிலும் சென்னையில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் எக்காரணம் கொண்டும் மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களை தங்களது பயணச்சீட்டு முன்பதிவு மென்பொருளிலும், ரெட்பஸ், அபி பஸ், உள்ளிட்ட செயலிகளிலும் பொதுமக்களை குழப்பும் வகையில் பதிவிடக்கூடாது எனவும் அவ்வாறு பதிவு செய்தால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இதனை மீறி செயல்படும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது என்று தமிழக போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com