இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்: திமுகவின் தேர்தல் பிரசாரம்

இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் திட்டத்தின் மூலம் திமுகவின் தேர்தல் பிரசாரம் தொடங்கவிருக்கிறது.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..

சென்னை: இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில், வீடு வீடாகச் சென்று திமுக சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரும் 26ஆம் தேதி முதல் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் வீடு வீடாகச் சென்று திமுகவினர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அனைவரையும் காப்பாற்றும் அரசாக நம்முடைய அரசு செயல்படுகிறது என்பதை நமது சாதனைகள் வழியாகப் பரப்புரைச் செய்வோம் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று காணொலி வாயிலாக நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது,

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்து பிரமித்தேன்.

அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு, எல்.ஈ.டி திரைகளுடன் பிரம்மாண்ட கூட்டங்களாக இருந்தன. மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கூட்ட புகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது.

இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கூட்டங்கள் பரவலாக மாநிலம் முழுவதும் கழகத்தினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும்.

நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும். இவை அனைத்தையும் இப்போது நாம் தீர்மானமாகப் போட உள்ளோம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com